பைனான்சியர் வீட்டில் 27 பவுன் நகை, ரூ.2¾ லட்சம் கொள்ளை


பைனான்சியர் வீட்டில் 27 பவுன் நகை, ரூ.2¾ லட்சம் கொள்ளை
x

கூடலூரில் பைனான்சியர் வீட்டில் 27 பவுன் நகை, ரூ.2¾ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. மேலும் வடிவேலு காமெடி பாணியில் மிளகாய் பொடி தூவி சென்றனர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூரில் பைனான்சியர் வீட்டில் 27 பவுன் நகை, ரூ.2¾ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. மேலும் வடிவேலு காமெடி பாணியில் மிளகாய் பொடி தூவி சென்றனர்.

பணம், நகை கொள்ளை

நீலகிரி மாவட்டம் கூடலூர் அக்ரஹார தெருவை சேர்ந்த பைனான்சியர் அரசு மணி. இவர் கடந்த மாதம் 27-ந் தேதி கரூரில் நடந்த உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்றார். பின்னர் இன்று காலையில் வீடு திரும்பினார்.

அப்போது வீட்டுக்குள் பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், பீரோவுக்குள் பார்த்தபோது, அதில் இருந்த 27 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 90 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் பீரோவுக்கு முன்பு மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது.

மிளகாய் பொடி

இதுகுறித்து கூடலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது பின்பக்க கதவின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் ஊட்டியில் இருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவான கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சினிமாவில் நடிகர் வடிவேலு காமெடி காட்சியில் ஒரு வீட்டில் கொள்ளையடிக்கும்போது, மோப்ப நாயிடம் இருந்து தப்பிக்க மிளகாய் பொடியை தூவிவிட்டு செல்வது போன்று இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.Next Story