சேலம் ரெயில்வே கோட்டத்துக்கு ரூ.274¼ கோடி வருவாய்


சேலம் ரெயில்வே கோட்டத்துக்கு ரூ.274¼ கோடி வருவாய்
x

சேலம் ரெயில்வே கோட்டம் கடந்த ஆண்டு ரூ.274¼ கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக மேலாளர் கவுதம் ஸ்ரீநிவாஸ் தெரிவித்தார்.

சேலம்

சூரமங்கலம், ஆக.16-

சேலம் ரெயில்வே கோட்டம் கடந்த ஆண்டு ரூ.274¼ கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக மேலாளர் கவுதம் ஸ்ரீநிவாஸ் தெரிவித்தார்.

சுதந்திர தின விழா

சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. ரெயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம் முன்னிலை வகித்தார். கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீநிவாஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படை உதவி கமிஷனர் ரத்தீஷ் பாபு தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பை பார்வையிட்டார்.

விழாவில் கவுதம் ஸ்ரீநிவாஸ் பேசுகையில், கொரோனா கால கட்டத்தில் பொறியியல் சரக்கு ரெயில்கள் இயக்கப்பட்ட விதம் சேலம் கோட்டத்தில் சிறப்பாக இருந்தது. கடந்த 2021-2022-ம் ஆண்டில் 3.269 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 16 சதவீதம் அதிகமாகும். சேலம் கோட்டம் கடந்த ஆண்டில் ரூ.274.33 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டு வருவாயை விட 18.98 சதவீதம் அதிகமாகும். மேலும், பார்சல் அனுப்பியதன் மூலம் ரூ.22.03 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. இது முந்தைய ஆண்டு வருவாயை விட 6.08 சதவீதம் அதிகம் என்றார்.

ஜங்சன் ரெயில் நிலையம்

தொடர்ந்து ரெயில்வே பள்ளியான சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. முடிவில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு விருது, ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

இதேபோல் சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் நடந்த சுதந்திர தின விழாவுக்கு நிலைய அதிகாரி (வணிகம்) அய்யாவு தலைமை தாங்கினார். ரெயில் நிலைய அதிகாரி செல்வராஜ் தேசிய கொடி ஏற்றினார். தொடர்ந்து பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.


Next Story