வேலூர் மண்டலத்தில் இருந்து 275 சிறப்பு பஸ்கள் இயக்கம்
மகா தீபத்தையொட்டி திருவண்ணாமலைக்கு வேலூர் மண்டலத்தில் இருந்து 275 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன என்று போக்குவரத்துக்குக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மகா தீபத்தையொட்டி திருவண்ணாமலைக்கு வேலூர் மண்டலத்தில் இருந்து 275 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன என்று போக்குவரத்துக்குக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கார்த்திகை தீபத்திருவிழா
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திகழ்கிறது. இங்கு சாமி தரிசனம் செய்வதற்காக தமிழகம் மட்டுமின்றி, பிறமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தினமும் வருகை தருகிறார்கள். சாமி தரிசனத்துக்கு பின்னர் அவர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்வது வழக்கம். அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான கார்த்திகை தீபத்திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் அடுத்த மாதம் (டிசம்பர்) 6-ந் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாலை 6 மணியளவில் 2,668 அடி உயரமுடைய அண்ணாமலையார் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். இதனை காணவும், பின்னர் மலையை சுற்றி கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்வதற்கும் சுமார் 30 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
275 சிறப்பு பஸ்கள் இயக்கம்
இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி வேலூர் மண்டல அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு உட்பட்ட வேலூரில் இருந்து 100 பஸ்கள், திருப்பத்தூரில் இருந்து 75 பஸ்கள், ஆற்காட்டில் இருந்து 70 பஸ்கள், சோளிங்கர், பெங்களூரு, திருப்பதியில் இருந்து தலா 10 பஸ்கள் என்று மொத்தம் 275 சிறப்பு பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளன.
சிறப்பு பஸ்கள் அடுத்த மாதம் 5-ந் தேதி (திங்கட்கிழமை) காலை முதல் 7-ந் தேதி வரை 3 நாட்கள் இயக்கப்படுகிறது. பக்தர்களின் எண்ணிக்கையை பொறுத்து கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.