கடலில் 28 கி.மீ. நீந்தி சாதித்த மாற்றுத்திறனாளி சிறுவன்
இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி இடையே 28 கி.மீ. தூரம் கடலில் நீந்தி சென்னையை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுவன் சாதனை படைத்தார்.
ராமேசுவரம்
மாற்றுத்திறனாளி சிறுவன்
சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்தவர் பரத்மோகன். இவருைடய மனைவி நிர்மலாதேவி. இந்த தம்பதியின் மகன் ஹரேஷ் (வயது 16). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவர் நீச்சல் மீது அதிக ஆர்வம் உள்ளவர். ஏற்கனவே கேரள மாநிலம் கோவளம் மற்றும் கோவா உள்ளிட்ட பகுதிகளில் கடலில் நீந்தி சாதனை படைத்துள்ளார்.
இந்த நிலையில் இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை நீந்துவதற்காக நேற்று முன்தினம் ராமேசுவரத்தில் இருந்து இரண்டு படகுகளில் நீச்சல் வீரர் ஹரேஷ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் உள்ளிட்ட 25 பேர் சென்றனர். தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 11.35 மணிக்கு தலைமன்னார் கடலில் நீந்த தொடங்கினார். நேற்று மதியம் 11.29 மணிக்கு தனுஷ்கோடிக்கு நீந்தி வந்து சாதனை படைத்தார்.
சாதனை
தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை 28 கி.மீ. தூர கடல் பகுதியை 11 மணி நேரம் 52 நிமிடத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்.
இது பற்றி சிறுவனின் தாய் நிர்மலா தேவி கூறியதாவது:-
என் மகன் இதுவரையிலும் கோவா கடல் மற்றும் கேரளா பகுதிகளில் குறைந்த தூரம்தான் நீந்தி உள்ளான். தற்போது தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை 28 கிலோமீட்டர் தூரம் நீந்தி இருக்கிறான்.. இது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. கடல் சீற்றம் மற்றும் காற்றின் வேகம் மிக அதிகமாக இருந்ததால் நீந்துவதற்கு சற்று சிரமப்பட்டான். இருந்தாலும் அவனது முயற்சி வெற்றிகரமாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
சாதனை படைத்த சிறுவன் ஹரேசுக்கு, ஏசியா புக் ஆப் ரெக்கார்ட், இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் சார்பில் விருதும், சான்றிதழும் வழங்கி பாராட்டினா்.