பள்ளிக்கூட வேன் கவிழ்ந்து 28 மாணவர்கள் காயம்
நெல்லையில் பள்ளிக்கூட வேன் கவிழ்ந்து 28 மாணவர்கள் காயமடைந்தனர்.
நெல்லையில் பள்ளிக்கூட வேன் கவிழ்ந்து 28 மாணவர்கள் காயமடைந்தனர்.
விளையாட்டு பயிற்சி பெற சென்றபோது...
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு உண்டு உறைவிட பள்ளி உள்ளது. பழங்குடியினரின் குழந்தைகளுக்கான இந்த சிறப்பு பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளி மாணவர்களுக்கு பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் ஜிம்னாஸ்டிக் போன்ற விளையாட்டுகளை கற்று கொடுக்கவும், இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.
வேன் கவிழ்ந்தது
இதற்காக வள்ளியூரில் இருந்து 28 மாணவ-மாணவிகளை 4 ஆசிரியைகள் மற்றொரு தனியார் பள்ளிக்கூட வேனில் மதியம் அழைத்து வந்தனர். அந்த வேனை டிரைவரான திருக்குறுங்குடி தளவாய்புரத்தைச் சேர்ந்த தங்கமுத்து (வயது 36) ஓட்டி சென்றார்.
பாளையங்கோட்டை தெற்கு ஐகிரவுண்டு ரோட்டில் மாவட்ட தொழில் மையம் அருகில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக வேனின் அச்சு முறிந்ததாலும், பின்பக்க டயர் வெடித்ததாலும் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது நிலைதடுமாறிய வேன் சாலையோர வாறுகாலில் உருண்டு கவிழ்ந்தது.
28 மாணவர்கள் காயம்
இதனால் வேனில் இருந்த மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கூச்சலிட்டனர். இதுகுறித்து பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டனர்.
விபத்தில் காயமடைந்த ஆசிரியைகள் ஜெசியா சுதா (வயது 33), சோபியா (34), ஜென்சி (37), யமுனா (23) மற்றும் குழந்தைகளுக்கு உதவியாக வந்த பள்ளிக்கூட காவலாளி பரமேஷ் (45), டிரைவர் தங்கமுத்து மற்றும் மாணவ-மாணவிகள் 28 பேரை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
போலீஸ் துணை கமிஷனர் ஆறுதல்
படுகாயமடைந்த 19 மாணவ-மாணவிகள், 3 ஆசிரியைகளை உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு, டீன் ரேவதி பாலன் தலைமையில் மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். காயமடைந்த மாணவ-மாணவிகள், ஆசிரியைகளை நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் அனிதா, உதவி கலெக்டர் கார்த்திகாயினி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதுதொடர்பாக நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.