மது விற்ற 29 பேர் கைது


மது விற்ற 29 பேர் கைது
x

மது விற்ற 29 பேர் கைது

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் மது விற்பனை செய்த 29 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள் மற்றும் 750 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்தனர்.

சட்டவிரோதமாக மது விற்பனை

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியாவுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனை தொடர்ந்து அவர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று முன்தினம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் அந்தந்த சரகங்களில் தீவிர சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் தஞ்சை மாநகரம் முழுவதும் பாலாஜிநகரில் 2 இடங்களிலும், சாந்தபிள்ளைகேட், பழைய பஸ்நிலையம், தொம்பன்குடிசை, செங்கிப்பட்டி கடைதெரு, நடுகாவேரி, பள்ளியக்கிரஹாரம் பைபாஸ், அலிசக்குடி, கொடும்புறார் காலனி, பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர்.

29 பேர் கைது

அதில் 10 இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் மது விற்ற 11 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை போலீசார் அம்மாப்பேட்டை கொக்கேரி, தாராசுரம், பட்டீஸ்வரம், திருமங்கலக்குடி, திருப்புவனம், கும்பகோணம் நெல்லுக்கடைத்தெரு, இரும்பு தலை பஸ்நிறுத்தம், பாபநாசம் மற்றும் ஒரத்தநாட்டில் டாஸ்மாக் கடைகள் உள்ள 20 இடங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர்.

அதில்19 இடங்களில் மது விற்பனை செய்ததும், ஒரு இடத்தில் சாராய ஊறல் போடப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. அதை தொடர்ந்து மதுவிற்ற 18 பேரை கைது செய்தனர். அதில் சாராய ஊறல் போடப்பட்டிருந்த 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள் மற்றும் 750 லிட்டர் சாராயம் ஊறலை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story