291 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை


291 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
x
திருப்பூர்


உடுமலை, மடத்துக்குளம் தாலுகாக்களில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 291 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டன. நாளை சிலைகள் ஊர்வலம் நடக்கிறது.

விநாயகர் சதுர்த்தி விழா

உடுமலை, மடத்துக்குளம் தாலுகாக்களை உள்ளடக்கிய உடுமலை உட்கோட்டத்தில், உடுமலை பகுதியில் 73 சிலைகளும், குடிமங்கலம் பகுதியில் 67 சிலைகளும், தளி பகுதிகளில் 47 சிலைகளும், மடத்துக்குளம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியில் 28 சிலைகளும், குமரலிங்கம் பகுதியில் 42 சிலைகளும், கணியூர்பகுதியில் 15சிலைகளும், அமராவதி பகுதியில் ்19 சிலைகளும் எனமொத்தம் 291 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டுள்ளன.

இதில் இந்து முன்னணியினர் 205 சிலைகளையும், இந்து மக்கள் கட்சியினர் 30 சிலைகளையும், இந்து சாம்ராஜ்யம் அமைப்பினர்13 சிலைகளையும், இந்து ஜனநாயக முன்னணியினர் 25 சிலைகளையும், சிவசேனா கட்சியினர் 7 சிலைகளையும், பொதுமக்கள் 11 சிலைகளையும் வைத்துள்ளனர். தகர மேற்கூரை அமைக்கப்பட்டு, அங்கு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்து முன்னணியினர் 34-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை இந்து மக்கள் எழுச்சி திருவிழாவாக கொண்டாடுகின்றனர். இதையொட்டி உடுமலை நகரம், உடுமலை மேற்கு ஒன்றியம், உடுமலை கிழக்கு ஒன்றியம், குடிமங்கலம் ஒன்றியம், மடத்துக்குளம் நகர் மற்றும் வடக்கு ஒன்றியம், மடத்துக்குளம் தெற்கு ஒன்றியம் ஆகிய பகுதிகளில் 205சிலைகளை நேற்று பிரதிஷ்டை செய்து வைத்தனர்.இதில் எஸ்.வி.புரம் பஸ் நிறுத்தம் பகுதியில் 10அடி உயரம் உள்ள விநாயகர் சிலைக்கு ரூபாய் நோட்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதேபோன்று மத்திய பஸ்நிலையம் முன்பும் விநாயகர் ரூபாய் நோட்டு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.நாளை (வெள்ளிக்கிழமை) உடுமலை, தளிஎரிசனம்பட்டி, குடிமங்கலம் பகுதிகளிலும், நாளை மறுநாள் மடத்துக்குளம், கொழுமம் பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நடைபெறுகிறது.விநாயகர் சதுர்த்தியையொட்டி உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர். தேன்மொழிவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

விநாயகர் சிலை பிரதிஷ்டை

இந்த நிலையில், உடுமலை தங்கம்மாள் ஓடைவீதிக்கு அருகே எம்.பி.நகரில் உள்ள மாலையம்மன் கோவில் வளாகத்தில் நேற்று காலை பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை பிற்பகல் டெம்போ வாகனத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, பழனி சாலையில் வெஞ்சமடை பகுதியில் பி.ஏ.பி.உடுமலை கால்வாய் தண்ணீரில் கரைக்கப்பட்டது.


Next Story