சேலம் மாவட்டத்தில் 29.60 லட்சம் வாக்காளர்கள்


சேலம் மாவட்டத்தில் 29.60 லட்சம் வாக்காளர்கள்
x
தினத்தந்தி 5 Jan 2023 7:30 PM GMT (Updated: 5 Jan 2023 7:30 PM GMT)

சேலம் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 29 லட்சத்து 60 ஆயிரத்து 593 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண்களே அதிகமாக இருக்கின்றனர்.

சேலம்

சேலம் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 29 லட்சத்து 60 ஆயிரத்து 593 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண்களே அதிகமாக இருக்கின்றனர்.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

சேலம் மாவட்டத்தில் 1.1.2023-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி கடந்த நவம்பர் மாதம் 9-ந் தேதி முதல் கடந்த மாதம் 8-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் பெறப்பட்ட படிவங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த இறுதி வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கார்மேகம் வெளியிட்டார். பின்னர் இது குறித்து அவர் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலில் 14 லட்சத்து 73 ஆயிரத்து 24 ஆண் வாக்காளர்கள், 14 லட்சத்து 87 ஆயிரத்து 294 பெண் வாக்காளர்கள், இதரர் 275 பேர் என மொத்தம் 29 லட்சத்து 60 ஆயிரத்து 593 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் ஆண்களை விட 14 ஆயிரத்து 270 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

புதிய வாக்காளர்கள்

கடந்த நவம்பர் மாதம் 9-ந் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மாவட்டம் முழுவதும் 53 ஆயிரத்து 370 வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது. 67 ஆயிரத்து 27 வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இன்று (நேற்று) வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட புதிய வாக்காளர்கள் 45 ஆயிரத்து 880 பேர் இடம் பெற்றுள்ளனர்.

தொடர்ச்சியாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப்பதிவு மையங்கள், தாலுகா அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள், உதவி கலெக்டர் அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் www.nvsp.in என்ற முகவரியிலும் Voter helpline app என்ற கைபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு கலெக்டர் கார்மேகம் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி கலெக்டர்கள் சங்கீத் பல்வந்த் வாகி, விஷ்ணுவர்த்தினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சரவணன் மற்றும் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. உள்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

சேலம் மேற்கு தொகுதி

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் மேற்கு தொகுதியில் அதிகபட்சமாக 2 லட்சத்து 98 ஆயிரத்து 76 வாக்காளர்கள் உள்ளனர். அதைத்தொடர்ந்து ஓமலூர் தொகுதியில் 2 லட்சத்து 91 ஆயிரத்து 687 வாக்காளர்கள் உள்ளனர்.


Next Story