விருகல்பட்டிபுதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நிர்வாகிகள் 2 பேர் கைது


திருப்பூர்


பயிர்க்கடன் வழங்கியதில் முைறகேடு செய்ததாக விருகல்பட்டி புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர், துணை செயலாளரை போலீசார் கைது செய்தனர்.

முறைகேடு புகார்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட விருகல்பட்டிபுதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர்க்கடன் வாங்கிய விவசாயிகள் அதனை திரும்ப செலுத்தியும் உரிய ரசீது வழங்கவில்லை என்று புகார் எழுந்தது. இதனால் விவசாயிகள் மேலும் பயிர்க்கடன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

மேலும் பயிர்க்கடன் விஷயத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரியும், விவசாயிகள் பிரச்சினைக்கு உரிய தீர்வுகாண கோரியும் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.

விருகல்பட்டிபுதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நிர்வாகிகள் 2 பேர் கைது

இந்த முறைகேடு தொடர்பாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் கடனை உடனடியாக திரும்ப வழங்ககோரியும், முறைகேட்டில் ஈடுபட்ட கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் மற்றும் அவருடைய உதவியாளர் மீது மேற்கொண்ட விசாரணை குறித்த அறிக்கையை கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு வழங்க கோரியும் கடந்த 14-ந் தேதி முதல் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் முறைகேடு தொடர்பாக குடிமங்கலம் போலீஸ் நிலையத்தில் விருகல்பட்டிபுதூரைச் சேர்ந்த விவசாயி லோகசிகாமணி என்பவர் அளித்த புகாரின் பேரில், கூட்டுறவு சங்க செயலாளர் கீதா (வயது 52) மற்றும் துணை செயலாளர் செந்தில்குமார் (49) ஆகிய 2 பேரையும் நேற்று குடிமங்கலம் போலீசார் கைது செய்து விசராணை நடத்தி வருகின்றனர்.


Next Story