தா.பழூர் விஸ்வநாதர் கோவிலில் 2-ம் நாள் நவராத்திரி வழிபாடு


தா.பழூர் விஸ்வநாதர் கோவிலில் 2-ம் நாள் நவராத்திரி வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் நவராத்திரி 2-ம் நாளான நேற்று விஸ்வநாதர்- விசாலாட்சி அம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதன்பின்னர் விசாலாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மங்கள ஆரத்தி நடைபெற்ற பின்னர் விசாலாட்சி அம்மனுக்கு அஷ்டோத்திர அர்ச்சனை நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அரியலூர் அருகே உள்ள கல்லங்குறிச்சியில் கலியுக வரதராசப்பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழாவில் உற்சவ மூர்த்தி பெருமாள்- ஸ்ரீதேவி, பூதேவியுடன் கொழுவில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

உடையார்பாளையம் காமாட்சி அம்மன் கோவில் தெருவில் மகா செல்வ கணபதி, பாலசுப்பிரமணிய சுவாமி, தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவராத்திரி திருவிழாவையொட்டி மகா கணபதி ஹோமமும், பால், தயிர், சந்தனம், மஞ்சள், பன்னீர், இளநீர், தேன் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக, ஆராதனையும் நடந்தது. பின்னர் தேவி கருமாரியம்மன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story