ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமை: அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு-திரளான பக்தர்கள் தரிசனம்


ஆடி மாதம் 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி சேலத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சேலம்

கோட்டை மாரியம்மன்

ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்களில் திருவிழா களைகட்டுவது வழக்கம். குறிப்பாக ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையில் அம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சென்று வழிபடுவார்கள். இந்த நிலையில் நேற்று ஆடி மாதம் 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

அதன்படி சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் முத்தங்கி அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

கனி, வெள்ளிக்காப்பு

இதேபோல் குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரியம்மன் கோவிலில் ஆடி 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கனி மற்றும் வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து நடந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டது.

இதேபோல் சேலம் நெத்திமேடு தண்ணீர் பந்தல் காளியம்மனுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது. மேலும் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் நெத்திமேடு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் பலர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். சேலம் அய்யந்திருமாளிகையில் உள்ள மாரியம்மன் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அலங்காரத்திலும், மரவனேரி காளியம்மன், சண்டி காளியம்மன் அலங்காரத்திலும், அம்மாபேட்டை காளியம்மன் சிறப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

வளையல் அலங்காரம்

மேலும் கே.ஆர்.தோப்பூரில் உள்ள கண்ணனூர் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு 33 ஆயிரத்து 333 வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். சேலம் குகை காளியம்மன், மாரியம்மன், சேலத்தாம்பட்டி காளியம்மன், செவ்வாய்பேட்டை மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், பொன்னம்மாபேட்டை மாரியம்மன் உள்பட மாநகரில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று ஆடி 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.


Next Story