2-வது திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் கைது
முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
கோவை உக்கடம் பிலால் நகரை சேர்ந்தவர் மரியம் சுபாஷினி (வயது 19). இவர் கோவை மேற்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
எனக்கும், தெற்கு உக்கடத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முகமது சுபானி (29) என்பவருக்கும் இடையே கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு ஒரு மாத குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக எனது கணவர் வீட்டுக்கு வரவில்லை. இதனால் எனக்கு சந்தேகம் ஏற்பட்டு விசாரித்தேன். இதில் எனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் அவர்கள் எனக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்வது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த நான் எனது கணவரை சந்தித்து இதுகுறித்து கேட்டேன். அப்போது அவர் என்னை திட்டி தாக்கினார். மேலும் எனது பெற்றோர் வரதட்சணையாக அளித்த நகைகளையும் தர மறுத்து விட்டார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் தெய்வமணி மற்றும் போலீசார் ஆட்டோ டிரைவர் முகமது சுபானியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.