இரண்டாம் நிலை காவலர்களுக்கு 2-ம் கட்ட உடற்தகுதி தேர்வு


இரண்டாம் நிலை காவலர்களுக்கு 2-ம் கட்ட உடற்தகுதி தேர்வு
x

கடலூரில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான 2-ம் கட்ட உடற்தகுதி தேர்வு நேற்று தொடங்கியது.

கடலூர்

கடலூர்,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய துறைகளுக்கான இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு கடந்த 6-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்க மாவட்டத்தில் மொத்தம் 876 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து நடந்த முதற்கட்ட தேர்வில் 757 பேர் மட்டும் பங்கேற்றனர். 119 பேர் உடற்தகுதி தேர்வுக்கு வரவில்லை. இதையடுத்து நடந்த தேர்வில் 652 பேர் இரண்டாம் கட்ட உடற்தகுதி தேர்வுக்கு தகுதி பெற்றனர்.

2 பேர் வரவில்லை

இதையடுத்து நேற்று நடந்த இரண்டாம் கட்ட உடற்தகுதி தேர்வுக்கு 350 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர்களில் 2 பேர் தேர்வுக்கு வரவில்லை. அதனை தொடர்ந்து 348 பேருக்கு இரண்டாம் கட்ட தேர்வாக கயிறு ஏறுதல், நீளம் அல்லது உயரம் தாண்டுதல், 100 அல்லது 400 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது.

மேலும் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் உடற்தகுதி தேர்வுக்கு 302 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர நேற்று நடந்த உடற்தகுதி தேர்வுக்கு வராத 2 பேர், இன்று நடக்கும் தேர்வுக்கு வந்தால், அவர்கள் உடற்தகுதி தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story