2-வது கட்ட லட்சார்ச்சனை தொடங்கியது


2-வது கட்ட லட்சார்ச்சனை தொடங்கியது
x

2-வது கட்ட லட்சார்ச்சனை தொடங்கியது

திருவாரூர்

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் 2-வது கட்ட லட்சார்ச்சனை நேற்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில்

நீடாமங்கலம் அருகே ஆலங்குடி கிராமம் உள்ளது. இங்கு ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் உள்ளது. இக்கோவில் தேவாரப்பாடல் பெற்றது. நவக்கிரக தலங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்கி வருகிறது. குருபகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு கடந்த 22-ந்தேதி பெயர்ச்சி அடைந்ததையொட்டி இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெற்றது.

2-வது கட்ட லட்சார்ச்சனை விழா

குருப்பெயர்ச்சிக்குப்பின் 2-வது கட்ட லட்சார்ச்சனை விழா நேற்று தொடங்கியது. இதனையொட்டி கோவிலில் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் குருபகவானுக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டது. உற்சவ தெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பிரகாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

உற்சவதெட்சிணாமூர்த்தி சன்னதியில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்களை சொல்லி லட்சார்ச்சனையை நடத்தி வைத்தனர். மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் லட்சார்ச்சனையில் பங்கேற்று பரிகாரம் செய்து கொண்டனர்.

திரளான பக்தர்கள் பங்கேற்பு

இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அறநிலைய இணை ஆணையர் ராமு உத்தரவின் பேரில் உதவி ஆணையர் மணவழகன், கோவில் கண்காணிப்பாளர் அரவிந்தன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர். வருகிற 1-ந்தேதி வரை லட்சார்ச்சனை விழா நடைபெறுகிறது.


Next Story