கத்தியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது
கத்தியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவின் பேரில் கொங்குநகர் போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் தலைமையில் வடக்கு போலீசார் ஊத்துக்குளி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் கத்தி இருந்தது. முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து 3 பேரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் திருப்பூர் போயம்பாளையத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 23), ஸ்ரீநகரை சேர்ந்த மணிகண்டன் (29), நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த குணசேகரன் (26) என்பதும், இவர்கள் மீது கொலை, வழிப்பறி, கொலைமுயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இவர்கள் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட திட்டமிட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பன்னீர்செல்வம், மணிகண்டன், குணசேகரன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.