கும்பகோணம் அருகே பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கில் கணவன்- மனைவி உள்பட 3 பேர் கைது
கும்பகோணம் அருகே பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கில் கணவன்- மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கும்பகோணம் அருகே பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கில் கணவன்- மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பா.ம.க. பிரமுகர் கொலை
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் மேலான மேடு பகுதியை சேர்ந்தவர் திருஞானசம்பந்தம் (வயது51). இவர் பா.ம.க. முன்னாள் நகர தலைவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ராஜேந்திரன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் சோழபுரம் அருகே மண்ணியாற்றங்கரை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த திருஞானசம்பந்தத்தை சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த திருஞானசம்பந்தத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே திருஞானசம்பந்தம் பரிதாபமாக உயிரிழந்தார்.
3 பேர் கைது
இதுகுறித்து சோழபுரம் போலீசார் விசாரணை நடத்தினர் விசாரணையில் இடப்பிரச்சினை தொடர்பான முன்விரோதத்தில் திருஞானசம்பந்தம் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் ராஜேந்திரன், அவருடைய மகன் மணிகண்டன், மகள் விஷ்ணுப்பிரியா (23), விஷ்ணுப்பிரியாவின் கணவர் ராஜா (26) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 5 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் விஷ்ணுப்பிரியா, ராஜா மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர். மேலும் ராஜேந்திரன் மற்றும் மணிகண்டனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.