ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது
வேப்பூர் அருகே ரேஷன் அரிசியை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது
கடலூர்
போலீசார் ரோந்து
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு கீதா மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது கருவேப்பிலங்குறிச்சி-விருத்தாசலம் சாலையில் சித்தலூர் ரவுண்டானா அருகே வந்த சரக்கு வாகனத்தை போலீசார் வழிமறித்தனர். பின்னர் அந்த சரக்கு வாகனத்தில் இருந்த சாக்கு மூட்டைகளை சோதனை செய்த போது, அதில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
3 வாலிபர்கள் கைது
இதையடுத்து சரக்கு வாகனத்தில் இருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், திட்டக்குடியை சேர்ந்த டிரைவர் மருதநாயகம்(வயது 38), விளம்பாவூரை சேர்ந்த முருகேசன்(38), சதீஷ்(20) என்பதும், பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கடத்த முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மருதநாயகம் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். மேலும் சரக்கு வாகனத்துடன் 1,250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.