திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேர் கைது
திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேர் கைது
தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் திருட்டு, வழிப்பறி உள்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
தொடர் திருட்டு
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம், ஒட்டங்காடு, புனல்வாசல், காலகம், சீதாம்பாள்புரம், பேராவூரணி, பட்டுக்கோட்டை மற்றும் பாப்பாநாடு உள்ளிட்ட பகுதிகளிலும், புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் நள்ளிரவில் வீடு புகுந்து திருடுவது, ஆளில்லாத வீட்டை குறிவைத்து பூட்டை உடைத்து கொள்ளையடிப்பது, அதிகாலை நேரங்களில் தனியாக நடந்து செல்பவர்களிடம் வழிப்பறி செய்வது, இருசக்கர வாகனங்கள் திருட்டு இப்படி தொடர் குற்றச்செயல்கள் நடந்து வந்தது.
இந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர்.
தனிப்படை அமைப்பு
இந்த தொடர் குற்ற சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா, பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு)சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின் உத்தரவின் பேரில், திருச்சிற்றம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயா, சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீஸ்காரர்கள் அருண்குமார், இஸ்மாயில், தினேஷ் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
வாகன தணிக்கை
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு தனிப்படை போலீசார் பேராவூரணி-ஒட்டங்காடு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையின்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் திருச்சிற்றம்பலம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து துருவி, துருவி விசாரணை நடத்தினர். தீவிர விசாரணையில் அவர்கள் பல்வேறு இடங்களில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.
3 பேர் கைது
பட்டுக்கோட்டை தாலுகா வடக்கு அதம்பை கிராமத்தை சேர்ந்த சங்கர் மகன் விஜய்(வயது 28). இவர் ஆடு வியாபாரம் செய்வதற்காக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடிக்கு அவ்வப்போது சென்று வந்து உள்ளார்.
அப்போது புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடியை பூர்வீகமாக கொண்டவரும் தற்போது அறந்தாங்கி தாலுகா வேதியக்குடியில் வசித்து வருபவருமான ஆனந்தன் மகன் ஜீவா என்ற முத்துராமன்(22), அறந்தாங்கி தாலுகா இடையாறு கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் அஜித்(20) உள்ளிட்ட சிலருடன் நட்பு ஏற்பட்டதாகவும், அவர்களுடன் இணைந்து பல்வேறு குற்ற சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் ஜீவா என்ற முத்துராமன், அஜித், விஜய் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.