வாலிபரை கடத்திய 3 பேர் பெங்களூருவில் கைது


வாலிபரை கடத்திய 3 பேர் பெங்களூருவில் கைது
x

சேலத்தில் வாலிபரை கடத்திய 3 பேரை பெங்களூருவில் போலீசார் கைது செய்தனர்.

சேலம்

சேலம்:

சேலத்தில் வாலிபரை கடத்திய 3 பேரை பெங்களூருவில் போலீசார் கைது செய்தனர்.

வாலிபர் கடத்தல்

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் மூலாராம் (வயது 52). இவர் குடும்பத்துடன் சேலம் பட்டை கோவில் பகுதியில் வசித்து வருகிறார். மேலும் சின்னகடை வீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் ஜெய்ராம் (22). கடந்த மாதம் 2-ந்தேதி ஜெய்ராம் கடையில் இருந்த போது, அங்கு வந்த 4 பேர் அவரை காரில் ஏற்றி கடத்தி சென்றனர்.

இது குறித்து மூலாராம் சேலம் டவுன் போலீசில் புகார் செய்தார். தொடர்ந்து கடத்தல் கும்பலை பிடிக்க போலீஸ் உதவி கமிஷனர்கள் அசோகன், வெங்கடேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் தீவிரமாக தேடி வருவதை அறிந்த கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் ஜெய்ராமை பெங்களூருவில் விட்டு சென்றனர். அங்கிருந்த அவரை தனிப்படை போலீசார் மீட்டு சேலத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

கைது

மேலும் ஜெய்ராம் நடத்தி வரும் மளிகை கடையில் சோதனை நடத்திய போது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்த மூலாராம், ஜெய்ராம் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து கடத்தல் கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூருவில் முகாமிட்டு தேடி வந்தனர். இந்த நிலையில் பெங்களூருவில் பதுங்கி இருந்த கடத்தல் கும்பலை சேர்ந்த பகாராம் (30), பிரகாஷ் (30), தினேஷ் (29) ஆகிய 3 பேரை கைது செய்து, சேலம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்கள் 3 பேரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.

பணம் கேட்டு மிரட்டல்

இது குறித்து போலீசார் கூறும் போது, கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் புகையிலை பொருட்கள் கடத்தி வந்து, கொடுக்கும் போது அதற்கான பணத்தை மூலாராம் கொடுத்து உள்ளார். கடந்த சில நாட்களாக பணம் கொடுக்காமல் இருந்த அவரிடம் பலமுறை பணத்தை கேட்டு உள்ளனர். ஆனால் பணம் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கடையில் தனியாக ஜெய்ராமை கடத்தி சென்று, அவரது தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். பின்னர் போலீசில் சிக்கி உள்ளனர் என்றனர்.


Next Story