பா.ஜனதாவினர் 3 பேர் கைது
பொள்ளாச்சியில் லாரி மீது கல்வீசியதாக பா.ஜனதாவினர் 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் லாரி மீது கல்வீசியதாக பா.ஜனதாவினர் 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3 பேர் கைது
பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன்முத்தூரில் இருந்து திருச்சூருக்கு கற்கள் ஏற்றிக் கொண்டு 2 லாரிகள் சென்று கொண்டிருந்தன. பொள்ளாச்சி காந்தி சிலை அருகில் லாரிகளை பா.ஜனதாவினர் சிறைப்பிடித்தனர். மேலும் அதிக பாரம் ஏற்றி செல்வதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் ஆத்திரத்தில் பா.ஜனதாவினர் ஒரு லாரியின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பா.ஜனதாவினர் கலைந்து சென்றனர். அதிக பாரம் ஏற்றி வந்ததாக லாரிகளை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையில் கேரளா மாநிலம் அங்கமாலியை சேர்ந்த டிரைவர் ஜோபி (வயது 40) என்பவர் பொள்ளாச்சி நகர கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் வழிமறித்தல், கொலை மிரட்டல் விடுத்தல், வாகனத்தை சேதப்படுத்துதல், அனுமதி இல்லாமல் கூட்டம் கூடுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் சுப்பேகவுண்டன்புதூரை சேர்ந்த பா.ஜனதா பொள்ளாச்சி நகர தலைவர் பரமகுரு, குமரன் நகரை சேர்ந்த சபரி (25), டி.கோட்டாம்பட்டி செந்தில் (38) ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். பின்னர் 3 பேரையும் கைது செய்து மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் கோவை தெற்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் பா.ஜனதாவினர் 3 பேரை கைது செய்ததை கண்டித்து சப்-கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் போலீசாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து மாவட்ட தலைவர் வசந்தராஜன் கூறுகையில், கடந்த 1½ ஆண்டுகளாக கேரளாவுக்கு அதிகளவு கனிமவளங்கள் கடத்தப்படுகின்றன. நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கற்களை ஏற்றி செல்கின்றனர். இதை போலீசார், வருவாய் துறை, கனிமவள அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இதனால் அரசுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. பா.ஜனதாவினர் 3 பேரை கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறோம். கனிமவளங்கள் கடத்துவதை தடுக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றார்.