வாகன சோதனையின்போது 3 கார்கள் சிக்கின
நாமக்கல் மாவட்டம் வெப்படையில் வாகன சோதனையின்போது 3 கார்கள் சிக்கின.
எலச்சிபாளையம்
திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் திருச்செங்கோட்டில் இருந்து வெப்படை செல்லும் சாலையில் வாகன சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் போது வெப்படையிலிருந்து வேலாயுதம்பாளையம் சென்று கொண்டிருந்த 2 சொந்த வாகனங்கள் (கார்கள்) பயணிகளை வாடகைக்கு ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதனால் அந்த 2 கார்களையும் மோட்டார் வாகன ஆய்வாளர் பாமபிரியா சிறைபிடித்து அந்த ஓட்டுனர்களை எச்சரித்தார். மேலும் பொதுமக்கள் தங்கள் பயன்பாட்டிற்கு அனுமதி உள்ள வாடகை வாகனங்களை பயன்படுத்த வேண்டும். அவ்வாறு பயன்படுத்தாமல் சொந்த வாகனங்களை பயன்படுத்தினால் காப்பீடு நிறுவனத்தில் பயணிகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு ஏதும் கிடைக்காது எனவும் தெரிவித்தார். மேலும் சுற்றுலா வாகனம் ஒன்று தகுதி சான்று புதுப்பிக்காமல் இயங்கியது. அதனையும் சிறை பிடித்தனா். இந்த 3 வாகனங்களும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டன.