மின்சார ரெயில் மோதி 3 சிறுவர்கள் பலி


மின்சார ரெயில் மோதி 3 சிறுவர்கள் பலி
x

சென்னை அடுத்த ஊரப்பாக்கம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 சிறுவர்கள் மின்சார ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தாம்பரம்,

சென்னை அடுத்த ஊரப்பாக்கம் அருகே உள்ள கிளாம்பாக்கம் செல்லியம்மன் கோவில் முதல் தெருவை சேர்ந்தவர் ஜம்பப்பா. இவரது மகன்கள் சுரேஷ் (வயது 15) ரவி (12). இருவருக்கும் காது கேட்காது.

ஜம்பாப்பாவின் உறவினர் அனுமந்தப்பாவும் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவரது மகன் மஞ்சுநாத் (11). இந்த சிறுவனுக்கும் காது கேட்காது. வாய் பேச முடியாது. கர்நாடக மாநிலம் கொப்ளி மாவட்டத்தை சேர்ந்த இவர்கள் ஊரப்பாக்கம் பகுதியில் தங்கி மோட்டார் சைக்கிள்களுக்கு சீட் கவர் செய்யும் வேலை பார்த்து வருகின்றனர்.

இவர்களது மகன்கள் சுரேஷ், ரவி மற்றும் மஞ்சுநாத் ஆகிய 3 பேரும் கர்நாடக மாநிலத்தில் வாய் பேச முடியாத காது கேளாதோர் பள்ளியில் தங்கி படித்து வந்தனர். தசரா விடுமுறையில் பெற்றோரை பார்க்க 3 பேரும் 4 நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்தனர்.

ரெயில் மோதி பலி

நேற்று காலை ஓட்டலில் சாப்பாடு வாங்க 3 பேரும் வீட்டில் இருந்து கிளம்பி ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது ஊரப்பாக்கம் ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.

அந்த நேரத்தில் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி மின்சார ரெயில் வந்தது. தண்டவாள பகுதியில் சிறுவர்களை பார்த்த மின்சார ரெயில் டிரைவர் ஹாரன் ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்தார். சிறுவர்களுக்கு காது கேட்காததால் தண்டவாளத்தில் நடந்து சென்ற 3 பேர் மீதும் மின்சார ரெயில் மோதியது.

இந்த விபத்தில் சிறுவர்கள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்து வந்த உறவினர்கள் இறந்த சிறுவர்கள் உடல்களை பார்த்து கதறி அழுதது நெஞ்சை உலுக்கியது. விபத்து நடந்த இடத்தில் தாம்பரம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரவன் தலைமையில் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று சிறுவர்கள் உடல்களை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் சிறுவர்களின் உடல்கள் பெற்றோர்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள சோந்த ஊருக்கு கொண்டு சென்றனர்.


Next Story