மின்கம்பி அறுந்து விழுந்ததில் 3 மாடுகள் பலி
சிவகங்கை அருகே மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் 3 மாடுகள் இறந்தன.
சிவகங்கை அருகே மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் 3 மாடுகள் இறந்தன.
மின்கம்பி அறுந்து விழுந்தன
சிவகங்கையை அடுத்த பில்லூரை சேர்ந்தவர்கள் சுப்பம்மாள், இந்திரா மற்றும் பஞ்சா. இவர்கள் கடன் உதவியுடன் பசுமாடுகளை வாங்கி வளர்த்து வந்தனர். இவர்களது மாடுகள் தினமும் அந்தப் பகுதியில் மேய்ந்து விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.
அதன்படி. நேற்று மாலையில் வழக்கம் போல் 3 பேரின் மாடுகளும் மேய்ச்சலுக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தன. அப்போது அந்தப் பகுதியில் பலத்த காற்று வீசியது. இதில் வயல்வெளியில் தாழ்வாக இருந்த மின் கம்பி அறுந்து மாடுகளின் மீது விழுந்தது.
3 மாடுகள் பலி
அப்போது மின்சாரம் தாக்கியதில் 3 மாடுகளும் துடிதுடித்து இறந்தன. இந்த நிலையில் நீண்ட நேரமாகியும் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் வீட்டுக்கு திரும்பி வராததால் அதை தேடி மாட்டின் உரிமையாளர்கள் சென்றனர். அங்கு வயல்வெளியில் மின்கம்பியில் சிக்கி மாடுகள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இது குறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த பகுதியில் மின்வினியோகம் நிறுத்தப்பட்டது. இறந்த மாடுகளை பார்த்து மாட்டின் உரிமையாளர்கள் கண்கலங்கி நின்றனர். மின்சாரம் தாக்கி பலியான மாடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மாட்டின் உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.