தென்னப்தோப்புகளில் 3 கோடி தேங்காய் தேக்கம்
பொள்ளாச்சியில் வரத்து அதிகரித்ததால் விலை சரிந்து தென்னப்தோப்புகளில் 3 கோடி தேங்காய் தேக்கம் அடைந்தது. மேலும் 70 சதவீத வெளிநாட்டு ஏற்றுமதி குறைந்தது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் வரத்து அதிகரித்ததால் விலை சரிந்து தென்னப்தோப்புகளில் 3 கோடி தேங்காய் தேக்கம் அடைந்தது. மேலும் 70 சதவீத வெளிநாட்டு ஏற்றுமதி குறைந்தது.
தென்னை விவசாயம்
பொள்ளாச்சியில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இது வெள்ளை ஈ தாக்குதல், கேரள வாடல் நோய் தாக்குதலால் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது.
தற்போது வரத்து அதிகரித்ததால் தேங்காய் விலையும் குறைந்து வருகிறது. மேலும் விற்பனை குறைந்ததால், வெளிநாட்டு ஏற்றுமதியும் குறைந்து விட்டது. இதனால் தென்னை விவசாயிகள் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.
வாழ்வாதாரம் பாதிப்பு
இதுகுறித்து தென்னை விவசாயிகள் கூறியதாவது:-
தேங்காய் வரத்து அதிகமாக உள்ளது. ஆனால் தேவை குறைந்ததால் விற்பனை இல்லை. இதனால் விலை குறைந்து வருகிறது. ஏற்கனவே நோய் தாக்குதல் காரணமாக தென்னை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது தேங்காய் விலை குறைவு காரணமாக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடியாக தேங்காயை கொள்முதல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
ஏற்றுமதி குறைந்தது
தேங்காய் வியாபாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சியில் இருந்து வாரந்தோறும் 30 கன்டெய்னர் லாரிகளில் கொச்சி துறைமுகத்துக்கு தேங்காய் கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து கப்பல் மூலம் துபாய்ககு ஏற்றுமதியாகிறது. ஒரு கன்டெய்னருக்கு 56 ஆயிரம் தேங்காய் வீதம் சுமார் 29 டன் வரை கொண்டு செல்லப்படுகிறது. தற்போது வெளிநாடுகளில் விற்பனை குறைந்து விட்டது. இதனால் வாரந்தோறும் 10 கன்டெய்னர் லாரிகளில்தான் தேங்காய் ஏற்றுமதியாகிறது. இது 70 சதவீதம் ஆகும்.
இது தவிர உள்நாட்டில் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்து விட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் தேங்காய் கிலோ ரூ.26 முதல் ரூ.28 வரை விற்பனை ஆனது. தற்போது பச்சை தேங்காய் ரூ.19, கருப்பு தேங்காய் ரூ.20-க்கு தான் விற்பனை ஆகிறது. விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் தென்னந்தோப்புகளில் 3 கோடி தேங்காய்கள் தேக்கி வைக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.