கடந்த ஒரு ஆண்டில் ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்பட்ட ரூ.3¼ கோடி முடக்கம் சைபர் கிரைம் போலீசார் தகவல்


கடந்த ஒரு ஆண்டில்  ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்பட்ட ரூ.3¼ கோடி முடக்கம்  சைபர் கிரைம் போலீசார் தகவல்
x

கடந்த ஒரு ஆண்டில் ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்பட்ட ரூ.3¼ கோடி முடக்கப்பட்டு உள்ளது என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சேலம்

சேலம்,

களைக்கொல்லி மருந்து

சேலம் புதிய பஸ் நிலைய பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 59). விவசாயி. கடந்த ஜூலை மாதம் 18-ந்தேதி இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் 30 சதவீதம் தள்ளுபடி விலையில் களைக்கொல்லி மருந்து விற்பனை செய்யப்படுவதாக இருந்தது. இதை நம்பி குறுஞ்செய்தியில் இருந்த வங்கி கணக்கிற்கு ரூ.19 ஆயிரம் அனுப்பினார்.

ஆனால் களைக்கொல்லி மருந்து வரவில்லை. பின்னர் குறுஞ்செய்தி வந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் ஏமாற்றப்பட்டத்தை அறிந்த நாராயணன் சேலம் டவுன் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செல்லபாண்டியன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

மோசடி செய்யப்பட்ட பணம் உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு தனியார் வங்கி கணக்கிற்கு சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரூ.19 ஆயிரம் நாராயணன் வங்கி கணக்கில் திரும்ப சேர்க்கப்பட்டது.

முடக்கம்

இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறும் போது, சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்களை நம்பி யாரும் பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம். வங்கியில் இருந்து பேசுவதாக கூறும் நபர்களிடம் வங்கி கணக்கு விவரங்களை தெரிவிக்க கூடாது. ஆன்லைன் மூலம் பணம் கட்டி ஏமாற்றம் அடைந்தவர்கள் 1930 எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். சேலம் மாநகர் பகுதியில் கடந்த ஒரு ஆண்டில் ஆன்லைன் மூலம் மோசடி செய்து ஏமாற்றப்பட்ட ரூ.3 கோடியே 28 லட்சத்து 84 ஆயிரத்து 140 முடக்கம் செய்யப்பட்டு உள்ளது. கோர்ட்டு மூலம் விரைவில் முடக்கம் செய்யப்பட்ட பணம் அவரவர் வங்கி கணக்கிற்கு திரும்ப செலுத்தப்படும் என்று கூறினர்.


Next Story