பெருங்குடியில் வக்கீல் கொலை வழக்கில் சரணடைந்த 3 பேருக்கு 3 நாள் போலீஸ் காவல்


பெருங்குடியில் வக்கீல் கொலை வழக்கில் சரணடைந்த 3 பேருக்கு 3 நாள் போலீஸ் காவல்
x

பெருங்குடியில் வக்கீல் கொலை வழக்கில் சரண் அடைந்த 3 பேரையும் 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஆலந்தூர் கோர்ட்டு அனுமதி அளித்தது. முன்னதாக 3 பேரையும் வக்கீல்கள் அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பெருங்குடி ராஜ்நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்கணேஷ் (வயது 33). இவர், சைதாப்பேட்டை கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார். இவரை கடந்த 25-ந் தேதி இரவு மர்மநபர்கள் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். இது பற்றி துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக கடந்த 27-ந் தேதி சென்னை வள்ளுவர்கோட்டத்தை சேர்ந்த முருகன் (28), நுங்கம்பாக்கத்தை சேர்ந்த பிரவீன் (28), மண்ணூர்பேட்டையை சேர்ந்த ஸ்ரீதர் (27) ஆகிய 3 பேர் விழுப்புரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

வக்கீல்கள் அடிக்க பாய்ந்தனர்

சரணடைந்த 3 பேரையும் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு ஆலந்தூர் கோர்ட்டில் துரைப்பாக்கம் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று மாஜிஸ்திரேட்டு புவனேஷ்வரி முன் வந்தது.

இதற்காக விழுப்புரம் சிறையில் இருந்த முருகன், பிரவீன், ஸ்ரீதர் ஆகிய 3 பேரையும் ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்தனர். இதற்காக ஆலந்தூர் கோர்ட்டில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

அப்போது அங்கிருந்த வக்கீல்கள், "குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும்" என கோஷமிட்டனர். அப்போது வக்கீல்கள் சிலர், திடீரென சரண் அடைந்த 3 பேரையும் அடிக்க பாய்ந்தனர். அதில் ஒருவர் கையில் செருப்புடன் ஆவேசமாக பாய்ந்தார்.

3 நாள் போலீஸ் காவல்

இதை கண்டதும், கோர்ட்டு வளாகத்தில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், வக்கீல்களை தடுத்தனர். பின்னர் மாஜிஸ்திரேட்டு புவனேஷ்வரி முன் 3 பேரையும் ஆஜர்படுத்தினார்கள்.

இந்த வழக்கில் துப்பு துலங்க வேண்டி இருப்பதால் 3 பேரையும் 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீசார் அனுமதி கேட்டனர். அதற்கு 3 பேரையும் 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரித்துவிட்டு வருகிற 1-ந் தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

பின்னர் 3 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். இதனால் ஆலந்தூர் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

2 பேர் கைது

இந்தநிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக ஜெய்கணேசின் நண்பரும், வக்கீலுமான நூருதீன் (30), கணேசன் (40) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், சென்னை தியாகராயநகரை சேர்ந்த பிரபல ரவுடி சி.டி. மணிக்கு ஜெய்கணேஷ்தான் வக்கீலாக இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு தன் நண்பரான வக்கீல் நூருதீனை ரவுடி சி.டி.மணியிடம் அறிமுகப்படுத்தினார். பின்னர் ஜெய்கணேஷ் விலக நூருதீனை சி.டி.மணி வக்கீலாக வைத்து உள்ளார். இதனால் நண்பர்களான ஜெய்கணேசுக்கும், நூருதீனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ரூ.8 லட்சம்

இதற்கிடையில் சி.டி.மணியின் கூட்டாளி பிரகாஷ், தண்டாயுதபாணி என்பவரை கொலை செய்த வழக்கில் 2013-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவரது சகோதரர் கணேசன் (40) என்பவர் பிரகாசுக்காக வழக்கு நடத்தவும், சாட்சிகளிடம் பேசவும் வக்கீல் ஜெய்கணேசிடம் ரூ.8 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. 2019-ம் ஆண்டு பிரகாசுக்கு சிறை உறுதி செய்யப்பட்டது.

இதனால் கணேசன், தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்க ஜெய்கணேஷ் மறுத்ததாக தெரிகிறது. இது குறித்து சிறையில் இருக்கும் பிரகாசிடம் கணேசன் கூறினார். இதனால் ஜெய்கணேசை கொலை செய்ய திட்டம் தீட்டினர். அதன்படி ரவுடி சி.டி.மணி வழியாக நூருதீன் கூலிப்படையை ஏவி ஜெய்கணேசை கொலை செய்ததாக தெரியவந்தது. இந்த வழக்கில் சி.டி.மணியை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story