வேன் கவிழ்ந்து விபத்து 3 பக்தர்கள் காயம்
விக்கிரவாண்டி அருகே வேன் கவிழ்ந்து விபத்து 3 பக்தர்கள் காயம் போக்குவரத்து பாதிப்பு
விக்கிரவாண்டி
சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த 22 பேர் தைப்பூச விழாவையொட்டி பழனி முருகன் கோவிலுக்கு வேனில் புறப்பட்டனர். வேனை சென்னை திருமுல்லைவாயில் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ராஜேஷ்(வயது 24) என்பவர் ஓட்டிச் சென்றார். பழனிக்கு சென்ற அவர்கள் சாமிதரிசனம் முடித்துவிட்டு மீண்டும் வேனில் சென்னை நோக்கி புறப்பட்டனர்.
அந்த வேன், நேற்று அதிகாலை விக்கிரவாண்டியை அடுத்த முண்டியம்பாக்கம் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி நிறுத்தம் அருேக வந்தபோது திடீரென சாலை நடுவில் இருந்த மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த ஏழுமலை, ராஜேஷ், சுலோச்சனா ஆகிய 3 பேருக்கு காயம் ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த விக்கிரவாண்டி போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் விபத்து மீட்பு வாகனத்தை வரவழைத்து விபத்துக்குள்ளான வேனை போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.