ராஜா, கொமாரபாளையம், மோகனூர் ஆகிய 3 வாய்க்கால்கள் சீரமைப்பு பணி எப்போது நிறைவடையும்?


ராஜா, கொமாரபாளையம், மோகனூர் ஆகிய 3 வாய்க்கால்கள் சீரமைப்பு பணி எப்போது நிறைவடையும்?
x

பரமத்திவேலூர் தாலுகாவில் உள்ள ராஜா வாய்க்கால் மற்றும் கொமாரபாளையம், மோகனூர் வாய்க்கால் சீரமைப்பு பணி எப்போது நிறைவடையும் என விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

ராஜா வாய்க்கால்

பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் படுகை அணையில் இருந்து ராஜா வாய்க்கால் பிரிக்கப்பட்டு நன்செய் இடையாறு வரை செல்கிறது. அங்கிருந்து கொமாரபாளையம், பொய்யேரி, மோகனூர் வாய்க்கால்களாக பிரிக்கப்பட்டு பாசன வசதி செய்யப்பட்டு வருகிறது.

கடைமடை பகுதியான மோகனூர் அருகே உள்ள ஒருவந்தூர் வரை செல்லும் வாய்க்காலில் முழுமையாக தண்ணீர் சென்றடைவதில்லை எனவும், ராஜா வாய்க்காலின் இருகரைகளையும் கான்கிரீட்டால் பலப்படுத்த வேண்டும் எனவும் விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தநிலையில் ராஜா வாய்க்கால், கொமராபாளையம், பொய்யேரி மற்றும் மோகனூர் ஆகிய வாய்க்கால்கள் சுமார் 76 கி.மீட்டர் தூரத்திற்கு கரைகளின் இருபுறமும் கான்கிரீட்டால் பலப்படுத்துவதற்காக (ரீ மாடலிங்) ரூ.184 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, ஆங்காங்கே தேவையான பகுதிகளில் மதகுகள் அமைப்பது, மணல் போக்கிகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது. ஆனால் இப்பணிகள் முழுமையாக முடிவடையாமல் உள்ளது.

சீரமைக்கப்படவில்லை

35 கி.மீட்டர் நீளமுள்ள ராஜா வாய்க்கால் பொத்தனூரில் இருந்து நன்செய் இடையாறு வரை சுமார் 7 கி.மீட்டர் தூரம் வரை மட்டுமே சீரமைக்கப்பட்டு உள்ளது. ஜேடர்பாளையம் படுகை அணையில் இருந்து தொடங்கும் ராஜாவாய்க்கால் வடகரையாத்தூர், ஆனங்கூர், அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், வெங்கரை, பாண்டமங்கலம் மற்றும் பொத்தனூர் வரை சுமார் 28 கி.மீட்டர் தூரம் வரை சீரமைக்கப்படாமலேயே உள்ளது.

கொமாரபாளையம் வாய்க்கால் அனிச்சம்பாளையத்தில் இருந்து தொடங்கி நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், செங்கப்பள்ளி, பாலப்பட்டி, வேட்டுவம்பாளையம் வழியாக எல்லைக்காட்டுபுதூர் வரை பாசன வசதி பெறுகிறது. 17.5 கி.மீட்டர் நீளமுள்ள இந்த வாய்க்கால் சுமார் 4 கி.மீட்டர் தூரம் மட்டுமே சீரமைக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள சுமார் 13.5 கி.மீட்டர் தூரம் வரை கொமாரபாளையம் வாய்க்கால் சீரமைக்கப்படாமலேயே உள்ளது.

மோகனூர் வாய்க்காலின் மொத்த நீளம் சுமார் 22.4 கி.மீட்டர் ஆகும். பரமத்திவேலூர் அருகே உள்ள அனிச்சம்பாளையத்தில் இருந்து தொடங்கி நன்செய்இடையாறு, கலிமேடு, கூடுதுறை, செங்கப்பள்ளி, குன்னிபாளையம், பாலப்பட்டி, எல்லக்காட்டுபுதூர், மணப்பள்ளி, மேலபேட்டபாளையம், மோகனூர், கொமாரபாளையம், செல்லிபாளையம், ஒருவந்தூர், ஒருவந்தூர் புதூர் வழியாக சென்று வடுகப்பட்டியில் நிறைவடைகிறது. இந்த வாய்க்கால் சுமார் 19 கி.மீட்டர் தூரம் வரை சீரமைக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள சுமார் 3.4 கி.மீட்டர் தூரம் வரை சீரமைக்கப்படாமலேயே உள்ளது.

விரைந்து முடிக்க வேண்டும்

ராஜா வாய்க்காலில் இருந்து பிரியும் கிளை வாய்க்காலான பொய்யேரி வாய்க்கால் சுமார் 5 கி.மீட்டர் நீளம் கொண்டது. இந்த வாய்க்கால் நன்செய் இடையாறு வாஞ்சி விநாயகர் கோவிலில் இருந்து பிரிந்து பொய்யேரி, ஒழுகூர்பட்டி வழியாக சென்று நன்செய் இடையாறு அருகே காவிரியாற்றில் கலக்கிறது. இவ்வாய்க்கால் 5 கி.மீட்டர் தூரமும் முழுமையாக சீரமைக்கப்பட்டு உள்ளது. முழுமையாக சீரமைக்கப்படாமல் உள்ள ராஜா, கொமாரபாளையம் மற்றும் மோகனூர் வாய்க்கால்களை காலம் தாழ்த்தாமல் சீரமைக்க தமிழக அரசு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து சீரமைப்பு பணிகளை தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கழிவுநீர் கலப்பு

இது குறித்து ராஜா வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க துணை தலைவர் குப்புதுரை கூறியதாவது:-

வெங்கரை, பாண்டமங்கலம், பொத்தனூர், வேலூர் மற்றும் மோகனூர் உள்ளிட்ட பேரூராட்சிகளில் இருந்து வெளியேற்றப்படும் சாக்கடை கழிவுநீர் நேரடியாக வாய்க்கால்களில் கலப்பதால் பரமத்திவேலூர் பகுதியில் பயிரிடப்பட்டு உள்ள வெற்றிலை, வாழை, நெல் உள்ளிட்ட பயிர்களில் நோய் பரவி பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகள் வயல்களில் இறங்கி வேலை செய்ய முடியாமல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதன் காரணமாக சுற்றுப்புற சூழல் பாதிப்புகள் ஏற்படுவதுடன் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகங்கள் சாக்கடை கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து வாய்க்கால்களில் திறந்து விட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் ராஜா வாய்க்கால், கொமாரபாளையம் மற்றும் மோகனூர் வாய்க்கால்களில் மேற்கொள்ளப்படாமல் உள்ள சீரமைப்பு பணிகளை காலதாமதம் செய்யாமல் சீரமைக்க சம்பந்தப்பட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நோய் பரவும் அபாயம்

பரமத்திவேலூர் ராஜா வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க கவுரவ தலைவர் செந்தில்நாதன்:-

ராஜா வாய்க்கால், பொய்யேரி வாய்க்கால், கொமாரபாளையம் வாய்க்கால் மற்றும் மோகனூர் வாய்க்கால்களில் அந்தந்த பகுதியில் உள்ள ஊராட்சி பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் கலக்கிறது. மேற்கண்ட வாய்க்கால்களில் பொதுமக்கள் குளிப்பதாலும், துணிகளை துவைப்பதன் மூலமும் நோய் பரவும் அபாயமும், சுற்றுச்சூழல் பாதிப்பும், விவசாய நிலங்கள் பாதிப்புக்கும் உள்ளாகி வருகின்றன.

இதனை தடுக்க ஊராட்சி பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து வாய்க்கால்களில் கலப்பதற்கு உரிய நடவடிக்கைகளை அந்தந்த பகுதியில் உள்ள ஊராட்சி நிர்வாகங்கள் முன்வர வேண்டும்.

ரூ.184 கோடி நிதி ஒதுக்கீடு

பொத்தனூரை சேர்ந்த வாழை விவசாயி ரவி:-

பரமத்திவேலூரில் உள்ள ராஜா வாய்க்கால், பொய்யேரி வாய்க்கால், கொமாரபாளையம் மற்றும் மோகனூர் வாய்க்கால்களை சீரமைப்பதற்காக கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது ரூ.184 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றது. 35 கி.மீட்டர் தூரம் உள்ள ராஜா வாய்க்கால் சுமார் 7 கி.மீட்டர் தூரம் வரை மட்டுமே இருபுறமும் கான்கிரீட் போடப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டன. ஆனால் மீதமுள்ள 28 கி.மீட்டர் தூரம் வரை சீரமைக்கப்படாமல் உள்ளது. தமிழக அரசு உடனடியாக ராஜா வாய்க்கால் சீரமைப்பு பணியை தொடங்கி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story