மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பலி: தலைமை வனபாதுகாவலர் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு


மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பலி: தலைமை வனபாதுகாவலர் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு
x

மின்வேலியில் சிக்கி யானைகள் பலியான விவகாரத்தில் முதன்மை தலைமை வனபாதுகாவலர், மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர், நிர்வாக இயக்குனர் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தர்மபுரியில் விவசாய நிலத்தை சுற்றி அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி 3 யானைகள் பரிதாபமாக இறந்தன. இதுதொடர்பாக, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி டி.ராஜா தலைமையிலான அமர்வு முன்பு முறையிடப்பட்டது. அப்போது, இறந்த யானைகளின் குட்டிகளை, யானை கூட்டத்துடன் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு, வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்கக்கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

குட்டிகளை காணவில்லை

அப்போது வக்கீல் சொக்கலிங்கம் ஆஜராகி, குட்டிகளை யானைக் கூட்டத்துடன் சேர்க்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால், அந்த குட்டி யானைகள் தற்போது எங்கு இருக்கிறது என்றே தெரியவில்லை என்றார்.

அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், "தற்போது இரு யானை குட்டிகளும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் ஆண் யானை ஒன்றுடன் சேர்ந்துள்ளது. இதுசம்பந்தமான புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்" என்றார்.

ஆஜராக வேண்டும்

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மின் வேலியில் சிக்கி வனவிலங்குகள் பலியாவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும் விதிமுறைகளை அமல்படுத்தாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். பின்னர், இதுகுறித்து வருகிற ஏப்ரல் 19-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதன்மை தலைமை வனபாதுகாவலருக்கும், தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர், நிர்வாக இயக்குனர் ஆகியோருக்கும் உத்தரவிட்டனர்.


Next Story