நெல் மூட்டைக்கு கட்டாய வசூல் செய்த ஊழியர்கள் 3 பேர் பணி நீக்கம்


நெல் மூட்டைக்கு கட்டாய வசூல் செய்த ஊழியர்கள் 3 பேர் பணி நீக்கம்
x

கேட்டவரம்பாளையம் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைக்கு கட்டாய வசூல் செய்த தற்காலிக ஊழியர்கள் 3 பேர் பணி நீக்கமும், அலுவலர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை

கேட்டவரம்பாளையம் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைக்கு கட்டாய வசூல் செய்த தற்காலிக ஊழியர்கள் 3 பேர் பணி நீக்கமும், அலுவலர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.

கட்டாய வசூல்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா கேட்டவரம்பாளையம் கிராமத்தில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகின்றது.

இங்கு ஒரு மூட்டைக்கு ரூ.40 முதல் ரூ.60 வரை விவசாயிகளிடம் இருந்து கட்டாய வசூல் செய்வதாகவும், அந்த பணத்தை திரும்பதர வலியுறுத்தியும், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கடந்த 13-ந்தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலக அலுவலர்கள் கேட்டவரம்பாளையம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விசாரணை நடத்தியதில், நெல் மூட்டைக்கு கட்டாய வசூல் செய்தது கண்டறியப்பட்டது.

அதைத் தொடர்ந்து அந்த நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் பணியாற்றிய 3 தற்காலிக ஊழியர்களான பருவகால பட்டியல் எழுத்தர் ஜெயபால், உதவியாளர் இளையராஜா, காவலர் பாஸ்கரன் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

அலுவலர் பணியிடை நீக்கம்

மேலும் இந்த பிரச்சினையை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டுவர தவறிய கேட்டவரம்பாளையம் நேரடி நெல்கொள்முதல் நிலைய அலுவலர் அண்ணாமலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அத்துடன் போராட்டத்தின் போது புகார் செய்த விவசாயிகளிடம் கட்டாயமாக வசூலித்த ரூ.38 ஆயிரத்து 320 தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகளிடம் ஊழியர்கள் வழங்கினர்.


Next Story