கஞ்சா விற்ற என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது


கஞ்சா விற்ற என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
x
தினத்தந்தி 4 Jun 2023 3:00 AM IST (Updated: 4 Jun 2023 3:00 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் இருந்து கடத்தி வந்து கோவையில் கஞ்சா விற்பனை செய்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

க.க.சாவடி

கேரளாவில் இருந்து கடத்தி வந்து கோவையில் கஞ்சா விற்பனை செய்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வீட்டில் சோதனை

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்களிடம் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்காக கல்லூரிகள் அருகே போலீசார் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவையை அடுத்த நவக்கரை அருகே கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் ஒரு வீட்டிற்கு சென்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

கல்லூரி மாணவர்கள்

அந்த சோதனையின்போது வீட்டில் எந்த இடத்திலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் இல்லை. ஆனால் அந்த வீட்டில் உள்ள அறையில் ஒரு சவுண்ட் பாக்ஸ் இருந்தது. அதை பார்த்ததும் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பாக்சை திறந்து பார்த்தபோது அதற்குள் பொட்டலம், பொட்டலமாக கஞ்சா இருந்தது.உடனே அந்த வீட்டில் இருந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த அர்ஜூன் (வயது 22), அக் ஷய் (22), மற்றொரு அர்ஜூன் (22) என்பதும், இவர்கள் கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது.

3 பேர் கைது

மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கேரளாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, 10 கிராம் பொட்டலமாக போட்டு அதை மாணவர்களுக்கு ரூ.500-க்கு விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து மாணவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அரை கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story