3 உரக்கடைகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம்-கோர்ட்டு உத்தரவு


3 உரக்கடைகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம்-கோர்ட்டு உத்தரவு
x

உரக்கட்டுப்பாட்டு ஆணையை மீறிய 3 உரக்கடைகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அரியலூர்

திடீர் ஆய்வு

அரியலூர் மாவட்டத்தில் உர விற்பனை மற்றும் இருப்பு தொடர்பாக ஆய்வு செய்ய வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் குழு மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ந் தேதி திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் உர விற்பனையில் முறைகேட்டில் ஈடுபட்ட 8 தனியார் உரக்கடைகள் மீது உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-ன்படி விற்பனை தடை விதிக்கப்பட்டது.

இந்தநிலையில், விற்பனை தடை காலத்தில் உர விற்பனையில் ஈடுபட்ட 6 தனியார் உரக்கடைகள் மீது அரியலூர், ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை ஆகிய கோர்ட்டுகளில் வழக்கு தொடரப்பட்டது.

ரூ.10 ஆயிரம் அபராதம்

இதில் அரியலூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் திருமானூர் வட்டாரத்தில் உள்ள 3 தனியார் உரக்கடைகளுக்கு உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985 மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955 ஆகிய சட்டத்தை மீறியது நீதி மன்றத்தால் உறுதி செய்யப்பட்டு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் மற்றும் ஒரு நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

உர விற்பனையாளர்கள் யூரியா மற்றும் இதர உரங்களை கூடுதல் விலைக்கு விற்றல், பதுக்கி வைத்தல், யூரியா உரத்துடன் பிற உரங்களை வாங்க விவசாயிகளை கட்டாயப்படுத்துதல் மற்றும் விற்பனை முனை எந்திரம் மூலம் பில் போடாமல் விற்பனை செய்தல், உரக்கடத்தல், உர பதுக்குதல், வேளாண்மை இல்லாத பிற பயன்பாடுகளுக்கு அனுப்புதல் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களாக அனுப்புதல் ஆகிய செயல்கள் கண்டறியப்பட்டால் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-ன்படி சம்பந்தப்பட்ட உரக்கடைகளில் உர உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story