3 ஆடுகள் கருகி பலி
ஆட்டுப்பட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 ஆடுகள் கருகி பலியானது.
பேரணாம்பட்டு அருகே சின்னதாமல் செருவு கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னையன் (வயது 62). இவர், அதே பகுதியில் தென்னை ஓலையிலான கீற்றுக் கொட்டகையில் 30 ஆடுகளை வளர்த்து வந்தார். இரவில் ஆட்டுப்பட்டியில் மண்எண்ணெய் 'சிம்னி' விளக்கை ஏற்றி வைப்பது வழக்கம். அதேபோல் நேற்று முன்தினம் இரவு கன்னையன் ஆட்டுப்பட்டியில் சிம்னி விளக்கை ஏற்றி வைத்து விட்டு, தூங்க சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது நள்ளிரவில் சிம்னி விளக்கை எலி தள்ளி விட்டதில் கீழே இருந்த தென்னை ஓலைகள் மீது விழுந்து தீப்பற்றி எரிந்தது. இதில் ஆட்டுப்பட்டியில் கட்டி வைத்திருந்த ஆடுகள் கதறின. ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு கன்னையன் எழுந்து சென்று பார்த்தார். தீயில் 3 ஆடுகள் எரிந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவர் பேரணாம்பட்டு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். நிலைய அலுவலர் உதயசந்திரன் மற்றும் தீயணைப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்து ஆடுகளை மீட்டனர். தீயில் கருகி பலியான 3 ஆடுகளின் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் மதிப்பிடப்படுகிறது. தீ விபத்து குறித்து தீயணைப்பு படையினர் விசாரணை நடத்தினர்.