3 மணிநேரம் கொட்டித்தீர்த்த கனமழை
கறம்பக்குடியில் நேற்று 3 மணிநேரம் கன மழை கொட்டித்தீர்த்தது. தாழ்வான பகுதிகள், வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள், விவசாயிகள் அவதிப்பட்டனர்.
கறம்பக்குடி பகுதியில் கனமழை
கறம்பக்குடி பகுதியில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சரியாக பெய்யாததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கவலை அடைந்திருந்தினர். மாண்டஸ் புயலின் காரணமாக மழை பெய்யும் என எதிர்பார்த்தனர். ஆனால் கறம்பக்குடி பகுதியில் தூறல் மழை கூட இல்லை. இதனால் இந்த ஆண்டு பருவமழை கைகொடுக்காதோ என வேதனைப்பட்டு வந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத நிலையில் நேற்று மதியம் 12 மணி தொடங்கி 3 மணிவரை கறம்பக்குடி பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது.
குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்தது
இடி மின்னல், காற்று என மழைக்கான அறிகுறிகள் ஏதுவும் இன்றி திடீரென பெய்த மழையால் கறம்பக்குடி நகர பகுதி முழுவதும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலையில் வாகனங்கள் செல்லமுடியாத அளவிற்கு கனமழை பெய்ததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். கறம்பக்குடி கண்டியன்தெரு, குளக்காரன் தெரு, அக்ரஹாரம் பெத்தாரிகுளத்தெரு ஆகிய பகுதிகளில் குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்தது. சாலைகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
வயல்களில் தேங்கிய மழைநீர்
இந்த மழையால் பெரும்பாலான விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தபோதும் கடந்த ஒருவார காலத்திற்குள் கடலை விதைந்திருந்த விவசாயிகள் இந்த பெரும் மழையால் விதைகடலைகள் மண்ணுக்குள்ளே அழுகி வீணாகிவிடும் என்பதால் வேதனை பட்டனர். இந்த மழையால் வயல்களில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியது. அதை அகற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். இதேபோல் ரெகுநாதபுரம், அம்புக்கோவில், வெட்டன்விடுதி உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.