3 வீடுகளுக்கு தீ வைப்பு; துணை போலீஸ் சூப்பிரண்டு ஜீப் கண்ணாடி உடைப்பு
3 வீடுகளுக்கு தீ வைப்பு; துணை போலீஸ் சூப்பிரண்டு ஜீப் கண்ணாடி உடைப்பு
பாபநாசம் அருகே கோவில் திருவிழாவில் இருதரப்பினருக்கு இடையே நடந்த மோதலில் 3 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு ஜீப் கண்ணாடி உடைக்கப்பட்டது. இது தொடர்பாக 37 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவில் திருவிழாவில் மோதல்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா ராஜகிரியில் அய்யனார் கோவில் திருவிழா நடந்தது. இந்த திருவிழாவையொட்டி நடந்த சாமி வீதிஉலாவின்போது இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.
இதை அறிந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு விரைந்து வந்து இருதரப்பினருக்கு இடையே பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து இருதரப்பினரும் சமரசம் அடைந்ததால் சாமி வீதி உலா நடந்தது.
ஜீப் கண்ணாடி உடைப்பு-3 வீடுகளுக்கு தீ வைப்பு
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென இரு தரப்பினருக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் கலவரமாக மாறியது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கல் வீசி தாக்கி கொண்டதுடன் குடிசைகளுக்கும், ஒரு கடைக்கும் தீ வைத்தனர். இதில் 3 குடிசை வீடுகள், ஒரு கடை தீயில் எரிந்து நாசமானது. இந்த கலவரத்தை கட்டுப்படுத்த சென்ற போலீசார் மீதும், போலீஸ் வாகனங்கள் மீதும் கல் வீசப்பட்டது. இதில் பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜீப்பின் முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டது. மேலும் கபிஸ்தலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் தலையில் படுகாயம் ஏற்பட்டது. உடனே சக போலீசார் அவரை மீட்டு பாபநாசம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பதற்றம் நிலவியது
இந்த மோதல் சம்பவம் பற்றி தகவல் அறிந்த தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி, போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன், பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, கும்பகோணம் கோட்டாட்சியர் லதா, பாபநாசம் தாசில்தார் மதுசூதனன் மற்றும் அதிரடிப்படை, ஆயுதப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
மேலும் கலவரத்தை கட்டுப்படுத்தக்கூடிய வஜ்ரா வாகனமும் அங்கு வரவழைக்கப்பட்டது. இந்த மோதல் தொடர்பாக இரவு முழுவதும் ராஜகிரியில் பதற்றமான சூழல் நிலவியது. இதனால் தஞ்சை-கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டன. நேற்று காலையில் தான் இயல்பு நிலை திரும்பியது.
37 பேர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள் வழக்குப்பதிவு செய்து கவிதா கொடுத்த புகாரின் பேரில் 21 பேரையும், குமார் கொடுத்த புகாரின் பேரில் 16 பேரையும் கைது செய்தார்.
மேலும் தலைமறைவாக உள்ள இரு தரப்பினரையும் சேர்ந்த 8 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.