ஜவுளிக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் பலி


திண்டிவனம் அருகே நடந்த சாலை விபத்தில் ஜவுளிக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் பலியானார்கள்.

விழுப்புரம்

திண்டிவனம்,

நேருக்குநேர் மோதல்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கொங்கரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் மகன் ரமேஷ் (வயது 30). இவா் சென்னை அடுத்த மறைமலைநகரில் தங்கி, ஜவுளிக்கடை நடத்தி வந்தார். இவருடைய உறவினர் ரங்கநாதன்(25), சென்னையில் கார் டிரைவராக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று திண்டிவனம் அடுத்த ரெட்டணையில் நடந்த உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ரமேசும், ரங்கநாதனும் ஒரு மோட்டார் சைக்கிளில் ரெட்டணை நோக்கி புறப்பட்டனர். திண்டிவனம் அடுத்த தொள்ளார் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரவு 8 மணியளவில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதிக் கொண்டன.

3 பேர் பலி

இந்த விபத்தில் ரமேஷ், ரங்கநாதன் ஆகியோர் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். அந்த சமயத்தில் பின்னால் வந்த லாரி, அவர்கள் மீது ஏறியது. இதில் லாரி சக்கரத்தில் சிக்கி ரமேஷ், ரங்கநாதன் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்த வெங்கடாஜலபதி (26) என்பவர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாா். உடனே அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடாஜலபதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து ரோஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story