தனியார் நிறுவனத்தில் ரூ.3½ லட்சம் மோசடி
கோவையில் தனியார் நிறுவனத்தில் ரூ.3½ லட்சம் மோசடி செய்த ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கணபதி
கோவையில் தனியார் நிறுவனத்தில் ரூ.3½ லட்சம் மோசடி செய்த ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த மோசடி குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தனியார் நிறுவனம்
கோவை-சத்தி ரோட்டில் உள்ள ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சபரி கைலாஷ் (வயது 34). இவர் அந்தப்பகுதியில் ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு அதேப்பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் (32) என்பவர் ஊழியராக வேலை செய்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த நிறுவனம் மூலம் கிடைத்த ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்தை கிருஷ்ணகுமார் அந்த நிறுவனத்தின் வங்கி கணக்கில் செலுத்தவில்லை என்று தெரிகிறது. இதை அறிந்த சபரி கைலாஷ், கேட்டபோது அதற்கு அவர் விரைவில் செலுத்திவிடுவதாக கூறினார்.
ரூ.3½ லட்சம் மோசடி
இதையடுத்து சபரி கைலாஷ், நிறுவன கணக்குகளை சரிபார்க்க ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ஊழியர்கள் சரிபார்த்தபோது, கிருஷ்ணகுமார், பொதுமக்களிடம் இருந்து வசூலித்த ரூ.3 லட்சத்து 65 ஆயிரத்தை நிறுவன கணக்கில் செலுத்தாமல் போலியாக கணக்கு காட்டி இருப்பது தெரியவந்தது.
உடனே அந்த நிறுவன உரிமையாளர் சபரி கைலாஷ், கிருஷ்ணகுமாரை அழைத்து கேட்டபோது அதை அவர் ஒப்புக்கொண்டதுடன் பணத்தை விரைவில் செலுத்திவிடுவதாக கூறினார். ஆனாலும் அவர் அந்த பணத்தை செலுத்தவில்லை.
போலீசார் விசாரணை
இதையடுத்து சபரி கைலாஷ் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் கிருஷ்ணகுமார் மீது போலீசார் மோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.