மகளிர் உரிமைத்தொகை பெற 3½ லட்சம் பேர் விண்ணப்பம்


மகளிர் உரிமைத்தொகை பெற 3½ லட்சம் பேர் விண்ணப்பம்
x

மகளிர் உரிமைத்தொகை பெற 3½ லட்சம் பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.

திருச்சி

3½ லட்சம் பேர் விண்ணப்பம்

திருச்சி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1,000 பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட பதிவு முகாம் கடந்த வாரம் லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர், தொட்டியம், மணப்பாறை மற்றும் மருங்காபுரி ஆகிய 7 தாலுகாக்களில் தொடங்கியது.

இதில் ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் வந்து மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்து வருகிறார்கள். இன்றுடன் (வெள்ளிக்கிழமை) முதற்கட்ட முகாம் நிறைவு பெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 54 ஆயிரத்து 187 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

2-ம் கட்ட முகாம்

இந்தநிலையில் 2-ம் கட்ட முகாம் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம் ஆகிய தாலுகாக்களில் அனைத்து கிராமங்களின் ரேஷன் கடைகளில் இந்த 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் வருகிற 16-ந்தேதி வரை நடைபெறுகிறது.

மேலும் திருச்சி மாநகராட்சி, துவாக்குடி நகராட்சி, சிறுகமணி மற்றும் கூத்தைப்பார் பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து ரேஷன் கடை பகுதிகளிலும் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற உள்ளது.

டோக்கன் வினியோகம்

சம்பந்தப்பட்ட ரேஷன் கடை பணியாளர்களால் அந்தந்த பகுதியில் முகாம்கள் நடைபெறும் இடம், நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவை வீட்டில் நேரடியாக வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட குடும்பத்தில் உள்ள குடும்பத்தலைவி, விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்பப்பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து வர வேண்டும்.

விண்ணப்பத்தை பதிவு செய்யும்போது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பத்துடன் ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்க தேவையில்லை. இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க வருவாய்த்துறையில் வருமானச் சான்று, நில ஆவணங்கள் போன்ற எவ்வித சான்றுகளையும் விண்ணப்பித்து பெற தேவையில்லை.

கட்டுப்பாட்டு அறை

விண்ணப்ப பதிவு முகாமிற்கு வருகை புரியும் விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் பதியப்பட்டு, அவர்களின் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்கப்படும். பயனாளிகளின் விரல் ரேகைப் பதிவு சரியாக அமையவில்லை எனில், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் வழியாக ஒரு முறை கடவுச்சொல் பெறப்படும்.விண்ணப்பதாரரின் ஆதார் அட்டையுடன் செல்போன் இணைக்கப்பட்டு இருந்தால், அந்த செல்போனை முகாமிற்கு எடுத்து வருவது விண்ணப்பப் பதிவை எளிமைப்படுத்தும். இது குறித்து சந்தேகங்கள் ஏதும் இருந்தால் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற எண்ணிலோ அல்லது 93840 56213 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.


Next Story