திருக்குறளின் 108 அதிகாரங்களை பாடங்களில் சேர்க்க 3 மாதம் கெடு: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


திருக்குறளின் 108 அதிகாரங்களை பாடங்களில் சேர்க்க 3 மாதம் கெடு: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

திருக்குறளின் 108 அதிகாரங்களை பாடங்களில் சேர்க்க 3 மாத கெடு விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

மதுரையைச் சேர்ந்த வக்கீல் ராம்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "தமிழ்மொழியின் ஒப்பற்ற சிறப்புகளில் ஒன்றான திருக்குறள், உலகப்பொதுமறையாக போற்றப்படுகிறது. திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பாலில் இடம்பெற்றிருக்கும் 108 அதிகாரங்களில் உள்ள குறள்களை 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் படிக்க வேண்டும் என கடந்த 2017-ம் ஆண்டில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டது. அதை கண்டிப்பாக அமல்படுத்தி, தேர்வில் இதுதொடர்பான கேள்விகள் இடம் பெறும்வகையில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாஸ்கரன் ஆஜராகி, 6-ம் வகுப்பில் இருந்து பிளஸ்-2 வரையிலான வகுப்புகளில் திருக்குறளின் 108 அதிகாரங்களை சேர்க்கும் பணிகள் நடக்கின்றன. திருக்குறள் சம்பந்தப்பட்ட கேள்விகளும் தேர்வில் இடம் பெற்றுள்ளன என்று தெரிவித்தார். அதுபற்றி விவரங்களையும் நீதிபதிகளிடம் சமர்ப்பித்தார்.

பிற நாடுகளில் முக்கியத்துவம்

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

'அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி

குறுகத்தறித்த குறள்'

என்று அவ்வையார் திருவள்ளுவ மாலையில் பாடியுள்ளார்.

அதாவது, நுண்ணிய அணுவை பிளந்து அதன் உள்ளே கடலை செலுத்தியதைப் போல, திருக்குறளில் சக்தி வாய்ந்த வார்த்தைகளை சுருக்கி கூறியுள்ளார், திருவள்ளுவர் என அவ்வையார் புகழ்ந்திருக்கிறார்.

திருக்குறள், தனிமனித மற்றும் பொது வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது. அதனால்தான் உலக அளவில் திருக்குறள் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.

சொத்து-அறிவு திருட்டு, கற்பழிப்பு, பொருளாதார மோசடி, பேராசை, மதுப்பழக்கம், சகிப்புத்தன்மை இன்மை, நேர்மை இன்மை, சமத்துவம் இன்மை, பெரியவர்களிடம் அவமரியாதை, குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, மத துவேஷம் போன்ற பல பிரச்சினைகளை தற்போது உலகம் எதிர்கொள்கிறது. தனிப்பட்ட பிரச்சினைகள் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேற்கண்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் திருக்குறள் தீர்வை வழங்கி இருக்கிறது. அதன் பிறப்பிடத்தைவிட மற்ற இடங்கள், நாடுகளில் இதற்கு முக்கியத்துவம் அளித்து போற்றப்படுகிறது, போதிக்கப்படுகிறது.

3 மாதத்தில் நிறைவேற்றுங்கள்

எனவே, சகிப்புத்தன்மையும் நல்லிணக்கமும் கொண்ட சமுதாயத்தை உருவாக்க மாணவர்களுக்கு திருக்குறளை கற்பிப்பதன் மூலம் ஒழுக்க நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவது காலத்தின் தேவை.

அந்த வகையில் அரசு தரப்பில் தெரிவித்த பதில்களை பதிவு செய்து கொள்கிறோம். இதை தவிர, வேறு வழிகாட்டுதல்கள் பிறப்பிக்க தேவையில்லை. எனவே திருக்குறளின் அந்த 108 அதிகாரங்களை பாடத்திட்டத்தில் சேர்க்கும் அரசாணையை 3 மாதத்தில் முழுமையாக நிறைவேற்றி, அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story