3 மாத கர்ப்பிணி மர்ம சாவு
பெண்ணாடம் அருகே 3 மாத கர்ப்பிணி மர்மமான முறையில் இறந்தார். அவரை அடித்து கொலை செய்து விட்டதாக போலீசில் தந்தை புகார் கூறினார்.
பெண்ணாடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள புக்குழி கிராமத்தை சேர்ந்தவர் வரதராஜன் மகள் வினோதினி(வயது 28). இவருக்கும், கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள திருமலை அகரம் கிராமத்தை சேர்ந்த பரமசிவம் மகன் பாலாஜி என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு வயதில் பவிஷி என்ற பெண் குழந்தை உள்ளது. இதனிடையே வினோதினி மீண்டும் கர்ப்பமானார். 3 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்த நிலையில் பாலாஜி, வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு வினோதினியை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிது. மேலும் இதன் காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் வினோதினி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் பெற்றோர் சமாதானப்படுத்தி மீண்டும் வினோதினியை கணவர் வீட்டில் விட்டனர்.
மர்ம சாவு
இதனிடையே வினோதினி நேற்று முன்தினம் இரவு மர்மமான முறையில் இறந்தார். இது குறித்து பாலாஜி, மாமனாரான வரதராஜனை செல்போனில் தொடர்பு கொண்டு, உங்கள் மகள் இறந்து விட்டதாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், எப்படி இறந்தார்? என்று கேட்டதற்கு பாலாஜி முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக வரதராஜன், பெண்ணாடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு வினோதினி செல்போனில் நன்றாக பேசினார். அதன் பிறகு அவர், 11 மணிக்கு இறந்து விட்டதாக கூறினார்கள். முதலில் நெஞ்சு வலியால் இறந்ததாகவும், பின்னர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறுகிறார்கள். வினோதினி சாவில் மர்மம் இருக்கிறது. அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் இருக்கிறது. எனவே தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
போலீசார் விசாரணை
இதையடுத்து பெண்ணாடம் போலீசார் விரைந்து சென்று வினோதினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.