என்ஜினீயர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது


என்ஜினீயர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது
x

என்ஜினீயர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

க.பரமத்தி,

வாக்குவாதம்

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள நஞ்சைகாளிக்குறிச்சியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 19). இவரது தங்கை மற்றும் ராஜபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் தோழிகள். இந்த நிலையில் நஞ்சைகாளி குறிச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவிழா நடந்துள்ளது. இந்த திருவிழாவிற்கு ராஜபுரத்தை சேர்ந்த தோழி வந்துள்ளார்.திருவிழா முடிந்ததும் அந்த பெண்ணை மணிகண்டன் தனது இருசக்கர வாகனத்தில் ராஜபுரத்தில் கொண்டு விட்டுள்ளார். அப்போது அங்கிருந்த மதன் (26), அபிஷேக் (19), தமிழரசன் (19) ஆகிய 3 பேரும் மணிகண்டனிடம் எங்கள் ஊர் பெண்ணை எப்படி கூட்டி கொண்டு வரலாம் என எச்சரித்துள்ளனர். பதிலுக்கு மணிகண்டனும் எச்சரித்துவிட்டு தனது வீட்டிற்கு வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி மாலை மீண்டும் ராஜபுரத்தை சேர்ந்த மதன் தனது செல்போன் மூலம் மணிகண்டனிடம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஏற்கனவே 3 பேர் கைது

இதனையடுத்து மணிகண்டன் தனது நண்பர் சின்னதாராபுரம் தன்னாசியப்பன் கோவில் தெருவை சேர்ந்த சூர்யாவிடம் (19) நடந்த விவரத்தை கூறியுள்ளார். இதனையடுத்து சூர்யா தனது செல்போனில் ராஜபுரத்தை சேர்ந்த 3 பேரிடம் பேசியுள்ளார்.இதில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ராஜபுரத்தை சேர்ந்த மதன், அபிஷேக், தமிழரசன் ஆகிய 3 பேரும் இருசக்கர வாகனத்தில் உருட்டுக்கட்டையுடன் சின்னதாராபுரத்திற்கு வந்து சூர்யாவை அடித்துள்ளனர். அப்போது அதனை தடுத்த அதே பகுதியை சேர்ந்த கருப்புசாமி மகன் என்ஜினீயர் அரவிந்த்தையும் (28) அவர்கள் உருட்டுக்கட்டையால் தாக்கியதில் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த கொலை குறித்த புகாரின்பேரில் சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த வாரம் மதன், அபிஷேக், தமிழரசன் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.

மேலும் 3 பேர் கைது


இந்தநிலையில் கொலை தொடர்பாக ராஜபுரம் அமராவதி ஆற்றுப் பாலத்திற்கு அடியில் மறைந்திருந்த ராஜபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் மணிகண்டன் (25), கீழத்தலையூர் மேட்டுக்கடையை சேர்ந்த கார்த்திக் (19) மற்றும் 18 வயது சிறுவன் உள்பட 3 பேரையும் சின்னதாராபுரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த கொலை வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story