டாஸ்மாக் ஊழியர் கொலையில் மேலும் 3 பேர் கைது; முக்கிய குற்றவாளியை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலைமறியல்


டாஸ்மாக் ஊழியர் கொலையில் மேலும் 3 பேர் கைது; முக்கிய குற்றவாளியை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலைமறியல்
x

நெல்லை அருகே டாஸ்மாக் ஊழியர் கொலையில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியைக் கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை அருகே டாஸ்மாக் ஊழியர் கொலையில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியைக் கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் ஊழியர் கொலை

நெல்லையை அடுத்த பேட்டை அசோகர் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் இளவரசன் என்ற ஆஷா (வயது 32). டாஸ்மாக் ஊழியரான இவர் கடந்த 12-ந்தேதி இரவில் அங்குள்ள பெருமாள் கோவில் அருகில் நின்றபோது, அங்கு வந்த கும்பல் திடீரென்று இளவரசனை கத்தியால் குத்தியது. இரும்பு கம்பியாலும் தாக்கியது.

இதில் படுகாயமடைந்த இளவரசன் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இடப்பிரச்சினையில் அப்பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் உள்ளிட்ட கும்பல் இளவரசனை கத்தியால் குத்தியும், கம்பியால் தாக்கியதும், இதில் அவர் உயிரிழந்ததும் தெரிய வந்தது.

மேலும் 3 பேர் கைது

இதையடுத்து மாரியப்பன், அவருடைய மனைவி சுடலி, மகன் மாதவன் (24) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேர் மீது பதிவு செய்த கொலைமுயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றினர். இதுதொடர்பாக மாதவன், 17 வயது சிறுவன் ஆகியோரை ஏற்கனவே கைது செய்த போலீசார், தலைமறைவான மாரியப்பன், சுடலியை தேடி வருகின்றனர்.

இந்தநிலையில் இளவரசன் கொலை தொடர்பாக, மாரியப்பனின் உறவினர்களான பேட்டை அசோகர் வடக்கு தெருவைச் சேர்ந்த முருகன் (50), சுந்தர்ராஜ் மகன் பார்த்திபன் (26), பேட்டை ரங்கம்மாள்புரத்தைச் சேர்ந்த திருமேனி மகன் அஜித் (21) ஆகிய 3 பேரை போலீசார் நேற்று முன்தினம் இரவில் கைது செய்தனர்.

உறவினர்கள் சாலைமறியல்

இதற்கிடையே தலைமறைவான முக்கிய குற்றவாளிகளான மாரியப்பன், சுடலி ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி, இளவரசனின் உறவினர்கள் நேற்று மதியம் பேட்டை போலீஸ் நிலையம் அருகில் சேரன்மாதேவி மெயின் ரோட்டில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

உடனே போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குற்றவாளிகள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்ட உறவினர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த வழியாக சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story