கோவை மாநகரில் 3 புதிய போலீஸ் நிலையங்கள்
கோவை மாநகரில் 3 புதிய போலீஸ் நிலையங்கள்
கோவை
கோவை மாநகரில் புதிதாக அமைக்கப்பட்ட கவுண்டம்பாளையம், சுந்தராபுரம், கரும்புகடை ஆகிய போலீஸ் நிலையங்களை தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு வருகிற 26-ந் தேதி திறந்து வைக்கிறார்.
தொழில் நகரம்
தமிழகத்தின் தொழில்நகரமாக விளங்கும் கோவையில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கோவையில் பிற மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இதுதவிர இங்குள்ள கல்வி நிலையங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் படித்து வருகின்றனர்.
கோவை மாநகரில் 15 சட்டம்- ஒழுங்கு மற்றும் குற்றபிரிவு போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர 3 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள், 2 போக்குவரத்து புலனாய்வு போலீஸ் நிலையங்கள் உள்ளன. இங்கு சுமார் 1,500 போலீசார் பணிபுரிகின்றனர்.
கூடுதல் போலீஸ் நிலையங்கள்
கோவை மாநகரில் பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு தற்போது உள்ள போலீஸ் நிலையங்களின் எண்ணிக்கை போதாது என்றும், கூடுதல் போலீஸ் நிலையங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை மாநகருக்கு சுந்தராபுரம், கரும்புகடை, கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளை மையமாக கொண்டு புதிய போலீஸ் நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
இதையடுத்து இந்த புதிய போலீஸ் நிலையங்களுக்கான இடம் தேர்வு செய்யும் பணி மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் 3 போலீஸ் நிலையங்களுக்கும் தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் செயல்படும் வகையில் இடம் தேர்வு செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட கட்டிடங்களில் இன்ஸ்பெக்டர்கள், எழுத்தர் அறை, கூட்டரங்கு, ஆயுதங்கள் வைக்கும் அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தது. மேலும் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்கும் தலா 25 போலீசார் வீதம் மொத்தம் 75 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
திறப்பு
இந்த பணிகள் அனைத்து நிறைவடைந்ததை தொடர்ந்து மேற்கண்ட 3 போலீஸ் நிலையங்களின் திறப்பு விழா வருகிற 26-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு கலந்து கொண்டு மேற்கண்ட 3 போலீஸ் நிலையங்களை திறந்து வைக்கிறார்.
இதையடுத்து மாநகர நுண்ணறிவு போலீசார் மற்றும் உளவுத்துறை போலீசார் தாங்கள் சேகரிக்கும் பிரத்யேக தகவல்களை பதிவு செய்ய வசதியாக ஆக்டோபஸ் எனும் புதிய மென் பொருளை டி.ஜி.பி. சைலேந்திர பாபு தொடங்கி வைக்கிறார். இந்த புதிய பொருள் மூலம் நுண்ணறிவு மற்றும் உளவுத்துறை போலீசார் சேகரிக்கும் தகவல்களை ஒருவருக்கொருவர் எளிதாக பரிமாறி கொள்ள முடிவதுடன், சேமித்து வைக்கவும் முடியும் என்பது குறிப்படத்தக்கது.