சேலத்தில் லாரி டிரைவரை தாக்கி பணம் பறித்த 3 பேர் கைது
சேலத்தில் லாரி டிரைவரை தாக்கி பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
லாரி டிரைவர்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 39), லாரி டிரைவர். இவர் கடந்த 25-ந்தேதி தான் ஓட்டிச்செல்லும் லாரியை பழுது பார்க்க சேலத்தில் உள்ள ஒரு பட்டறையில் நிறுத்தி இருந்தார். இதையொட்டி அவர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கினார். அன்று இரவு அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு விடுதிக்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 3 பேர் அவரை வழிமறித்து பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை வழிமறித்த 3 பேரும் சேர்ந்து ரமேசை தாக்கி அவர் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலி, ரூ.450-ஐ பறித்துக்கொண்டு சென்று விட்டனர்.
கைது
இது குறித்து ரமேஷ் சேலம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் சந்தேகத்தின் பேரில் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 33), களரம்பட்டி ரவி (32) மற்றும் பிரசாந்த் (27) ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் டிரைவரிடம் நகை, பணம் பறித்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.