வாலாஜா ஏரி பகுதியில் விஷம் வைத்து பறவைகளை கொன்ற 3 பேர் கைது
வாலாஜா ஏரி பகுதியில் விஷம் கலந்த இரை களை வைத்து பறவைகளை கொன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வடலூர்,
250 வாத்துகள் செத்தன
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பழனி. இவர் தனக்கு சொந்தமான 15 ஆயிரம் வாத்துகளை கடலூர் மாவட்டம் வடலூர் அருகே கொளக்குடி கிராமத்தில் உள்ள வயல்களில் பட்டிகள் அமைத்து, அதில் அடைத்து வைத்து கருங்குழி, கொளக்குடி, வாலாஜா ஏரி பகுதிகளில் தொழிலாளர்களை வைத்து மேய்ச்சலுக்கு விட்டு வருகிறார்.
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொழிலாளர்கள் ஏராளமான வாத்துகளை வாலாஜா ஏரி பகுதியில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தனர். அப்போது மர்மநபர்கள் பறவைகளை வேட்டையாடுவதற்காக தூவப்பட்டிருந்த குருணை (விஷம்) மருந்து கலந்த இரைகளை தின்ற 250-க்கும் மேற்பட்ட வாத்துகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்து செத்தன. மேலும் விஷம் கலந்த இரையை தின்ற சம்பங்கோழிகள் மற்றும் அபூர்வ வகை பறவைகளும் வாத்துகளுடன் செத்துக்கிடந்தன.
இதுகுறித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஷம் கலந்த இரைகளை வைத்து வாத்துகள், பறவைகளை கொன்ற நபர்கள் யார்? என விசாரணை நடத்தி வந்தனர்.
3 பேர் சிக்கினர்
இந்த நிலையில் வடலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி தலைமையிலான போலீசார் கொளக்குடி வாலாஜா ஏரி பகுதிகளில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதிகளில் நின்று கொண்டிருந்த 3 பேர் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் கருங்குழியை சேர்ந்த மாயவன் மகன் பிரபாகரன் (வயது 36), சின்னப்பன் மகன் அருள்தாஸ்(56), கொளக்குடியை சேர்ந்த தாமோதரன் மகன் பொங்கல்மாறன் (57) ஆகியோர் என்பதும், பறவைகளை வேட்டையாடுவதற்காக நெல், கம்புகளுடன் குருணை (விஷம்) மருந்தை கலந்து பையில் வைத்திருந்ததும் தெரியவந்தது.
மேலும் இவர்கள் 3 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலாஜா ஏரி பகுதிக்கு வரும் கொக்கு, நாரை உள்ளிட்ட பறவைகளை பிடிப்பதற்காக வயல்வெளிகளில் விஷம் கலந்த இரைகளை தூவியதும், அதனை தின்ற 250-க்கும் மேற்பட்ட வாத்துகள், சம்பங்கோழிகள், பறவைகள் செத்துப்போனதும் தெரிய வந்தது. மேலும் இவர்கள் ஏரி பகுதிகளில் வைக்கும் விஷம் கலந்த இரைகளை தின்று செத்துக்கிடக்கும் சம்பங்கோழிகள், பறவைகளை எடுத்து சென்று ஓட்டல்களில் விற்பனை செய்து வந்ததும் மேற்கண்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.