அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 3 பேர் கைது
சாத்தூர் அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சாத்தூர் அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பட்டாசு தயாரிப்பு
சாத்தூர் அருகே உள்ள சந்தையூர் வனப்பகுதியில் சிவகாசி மீனம்பட்டியை சேர்ந்த ரகு (வயது45), முகேஷ் (22) ஆகிய 2 பேரும் பட்டாசு தயாரிக்க முயன்ற போது எதிர்பாராத வகையில் மூலப்பொருள் கலவையின் போது உராய்வு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டது.
இதில் ரகு, முகேஷ் ஆகிய 2 பேரும் உடல் கருகி பலத்த காயம் அடைந்தனர். மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலன் அளிக்காமல் அவர்கள் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து அப்பையநாயக்கன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
எச்சரிக்கை
இதற்கிடையில் சட்டவிரோத பட்டாசுகள் தயாரிப்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்காத போலீசார் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் நிர்வாகம் மைக் மூலம் அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் சட்டவிரோத பட்டாசுகளை தயாரிக்க துணை போகும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரித்ததாக தெரிகிறது. மாவட்ட போலீஸ் நிர்வாகத்தின் இந்த எச்சரிக்கை போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
3 பேர் கைது
இதற்கிடையில் விருதுநகர் மாவட்ட போலீஸ் நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் சாத்தூர் உட்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் அனுமதியின்றி பட்டாசுகளை தயாரித்து அனுப்பி வைப்பவர்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை தயாரிப்பவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் மேட்டமலை பகுதியில் உரிய அனுமதியின்றி ஒரு இடத்தில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதனை சாத்தூர் டவுன் போலீசார் கைப்பற்றினர். இதில் தடை செய்யப்பட்ட சரவெடிகள் இருந்தது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சண்முகராஜ் (35), சுரேஷ் குமார் (39), முருகேசன் (50) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.