அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 3 பேர் கைது
சிவகாசி பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தற்காலிக தடை
சிவகாசி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இதில் நாக்பூர் உரிமம் பெற்ற 100-க்கும் அதிகமான பட்டாசு ஆலையில் விதிமீறல்கள் காரணமாக உற்பத்திக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பட்டாசுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பட்டாசு தேவையை சரி செய்ய தற்போது பல இடங்களில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் ரகசிய தகவல்கள் கிடைத்து வருகிறது.
3 பேர் கைது
அதன் பேரில் போலீசாரும், அதிகாரிகளும் ஆய்வு செய்து அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்கிடையில் சிவகாசி கிழக்கு போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் தலைமையில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது பாரைப்பட்டியில் உள்ள ஒரு பட்டாசு கடையின் பின்புறம் தகரசெட் அமைத்து அனுமதியின்றி பட்டாசு தயாரித்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக ஜோஷ்வரன் (வயது30), சேகர் (55), வைரவன் (52) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.10,120 மதிப்புள்ள பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.