வாடிப்பட்டி அருகே ஜல்லிக்கட்டு காளை திருடிய 3 பேர் கைது
வாடிப்பட்டி அருகே ஜல்லிக்கட்டு காளை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி அருகே ஜல்லிக்கட்டு காளை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜல்லிக்கட்டு காளை திருட்டு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரன். இவருடைய மகன் தினகரன் (வயது 21). கல்லூரி மாணவர். இவர் கடந்த 3 வருடங்களாக வீட்டில் ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வந்தார்.அந்த காளை பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை பெற்றது.
இந்நிலையில் வீட்டின் தொழுவத்தில் முதல் நாள் இரவு மாட்டை தண்ணீர் காண்பித்து இரை வைத்து கட்டி வைத்துவிட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை 5 மணிக்கு எழுந்துவந்து பார்த்தபோது அந்த காளையை காணவில்லை. இது சம்பந்தமாக வாடிப்பட்டி போலீசில் புகார் செய்தார்.
3 பேர் கைது
இந்த நிலையில் நேற்று போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சடையம்பட்டி பிரிவு என்ற இடத்தில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த மட்டப்பாறையை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் ஆத்தூர் பாரப்பட்டி யை சேர்ந்த பிரதீஸ் (23) மற்றும் சிவகுருநாதன் (24) ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார்கள். பின்னர் அவர்கள் ஜல்லிக்கட்டு காளையை திருடியதாக ஒப்புக்கொண்டனர்.
மேலும் அவர்களிடமிருந்து ரொக்க பணம் ரூ.30 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.