பக்தர்களிடம் பணம்-நகை பறித்த 3 பேர் கைது


பக்தர்களிடம் பணம்-நகை பறித்த 3 பேர் கைது
x

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் பக்தர்களிடம் பணம் மற்றும் நகையை பறித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்

மேல்மலையனூர்

ஊஞ்சல் உற்சவம்

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் அமாவாசையை முன்னிட்டு இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வதற்காக தருமபுரி மாவட்டம் சிவாடி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி மனைவி கல்யாணி (வயது 31) என்பவர் கோவிலுக்கு வந்திருந்தார். மேற்கு வாசல் அருகில் நின்று கொண்டிருந்தபோது, கல்யாணியின் கையில் இருந்த பணப்பையை 2 பேர் பறித்து கொண்டு ஓடினர். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை பிடித்து மேல்மலையனூர் புறக்காவல் நிலையத்தில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து பிடிபட்ட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமி மற்றும் 40 வயதுடைய அவரது தாய் என்பது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ.2 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.

மற்றொரு சம்பவம்

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய கர்நாடகா மாநிலம் கோலார் அம்பேத்கர் நகரைசேர்ந்த ஜெகநாதன் மகன் தங்கம் (37) என்பவர் வந்தார். அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்தது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் அய்யன் கோவில்பட்டு கிராமத்தை சேர்ந்த துரைமுருகன் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story