போலீஸ் வாகனத்தை திருடிச்சென்று பணம் பறித்த 3 பேர் கைது


போலீஸ் வாகனத்தை திருடிச்சென்று பணம் பறித்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 2 Dec 2022 6:45 PM GMT (Updated: 2 Dec 2022 6:46 PM GMT)

கருங்கலில் போலீஸ் வாகனத்தை திருடிச்சென்று பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை போலீசார் தேடிவருகின்றனர்.

கன்னியாகுமரி

கருங்கல்:

கருங்கலில் போலீஸ் வாகனத்தை திருடிச்சென்று பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை போலீசார் தேடிவருகின்றனர்.

போலீஸ் வாகனத்தில் வழிப்பறி

கருங்கல் அருகே உள்ள பெருமாங்குழி பகுதியைச் சேர்ந்தவர் பர்ணபாஸ். இவருடைய மகன் அஸ்வின் (வயது 22). வேன்டிரைவர். இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் கருங்கல் வேன் ஸ்டாண்டு பகுதிக்கு வந்துள்ளார். அப்போது இவர் ஹெல்மெட் அணியாததை பயன்படுத்தி போலீஸ் வாகனத்தில் வந்த 4 பேர் வழிமறித்து தங்களை போலீஸ் என அறிமுகப்படுத்தினர். பின்னர், அஸ்வினிடம் இருந்து ரூ.200-யை அபராதமாகவும், அவருடைய செல்போனையும் பறித்து அதற்குள் இருந்த ரூ.2 ஆயிரத்தையும் எடுத்துவிட்டு செல்போனை திருப்பிக் கொடுத்துள்ளனர்.

அப்போது, அஸ்வினுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனே, அஸ்வின் தனது செல்போனில் அந்த நபர்களையும், போலீஸ் வாகனத்தையும் படம்பிடித்துள்ளார். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

வாகனத்தை திருடினர்

பின்னர், இதுபற்றி கருங்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அஸ்வினிடம் பணம் பறித்த கும்பல் பயன்படுத்திய வாகனம் குலசேகரம் போலீஸ் நிலையத்துக்கு சொந்தமானது என்பதும், அந்த வாகனத்தை பழுது நீக்குவதற்காக சிராயன்குழியில் உள்ள ஒரு ஒர்க்‌ஷாப்பில் விட்டுள்ளதும் தெரியவந்தது. அங்கு போலீஸ்வாகனத்தின் பராமரிப்பு பணி முடிந்து நிறுத்தி இருந்தபோது, சிலர் அந்த வாகனத்தை திருடியதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் சிராயன்குழி பகுதியைச் சேர்ந்த டைட்டஸ் என்பவரது மகன் போஸ்கோ டைசிங் (38), வேலப்பன் மகன் விஷ்ணு (27), கணேசன் மகன் ரூபன் (38) மற்றும் கப்பியறை கஞ்சிகுழி பகுதியைச் சேர்ந்த ஜான் ஹென்றி மகன் ஹிட்லர் (40) ஆகியோர் சேர்ந்து அந்த வாகனத்தை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

3 பேர் கைது

இந்தநிலையில் போஸ்கோ டைசிங், விஷ்ணு, ரூபன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். ஹிட்லர் மட்டும் தப்பியோடி விட்டார். கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் போலீஸ் வாகனத்தை திருடிக் கொண்டு கருங்கல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றதாகவும், திரும்பி வரும்போது அஸ்வினிடம் பணம் பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக உள்ள ஹிட்லரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story